

சென்னை
தமிழக அரசின் சார்பாக அளிக்கப்பட்ட நீட் பயிற்சியின் மூலம் கடந்த ஆண்டு இரு மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தேர்வானதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "புதிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை தமிழக அரசு தெளிவாக இருக்கிறது. இருமொழிக் கொள்கைதான் நம் லட்சியப் பயணமாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும், இதைத்தான் வலியுறுத்துகின்றனர். ஏற்கெனவே இதனை வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு மக்களின் உணர்வுகள் குறித்து கடிதம் எழுதியிருக்கிறார்", எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீட் தேர்வில், அரசுத் தேர்வு மையங்களில் பயிற்சி பெற்ற ஒருவர் கூட தேர்வாகவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். முதன்முதலில் கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பாக நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், இரு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஒருவரும் இல்லை என சொல்லிவிட முடியாது. அதனால், கவலைப்படத் தேவையில்லை", என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.