

பிரதமராகக் கனவு கண்ட வாரிசுகள் எல்லாம் விலாசம் தெரியாமல் சுற்றுகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட வாசன் பேசியதாவது: ''பிரதமராக வேண்டும் என்று கனவு கண்ட பல தலைவர்கள், முன்னாள் தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் தற்போது விலாசம் தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலை.
தற்போது அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத பரிதாப நிலையிலே காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மையான நிலவரம்.
வாக்கு வங்கியைப் பொருத்தவரை, அதிமுக ஆட்சியைத் தக்க வைத்ததில் தமாகாவின் பங்கு மிக முக்கியமானது'' என்று தெரிவித்தார் ஜி.கே.வாசன்.
இதைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வாசன் நலத்திட்டங்களை வழங்கினார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதன்மூலம் கடந்த முறையைப் போலவே எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இம்முறை இழந்தது.
பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக் கட்டிலைத் தக்கவைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.