

பண்பலை உரிமத்துக்கான ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க உத்தரவிடக் கோரும் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு சான்றிதழ் தராததைச் சுட்டிக்காட்டி, தனியார் பண்பலை வானொலிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழும பண்பலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் சன் குழுமம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது சன் டிவி நெட்வொர்க், கல் ரேடியோ, சவுத் ஏசியா பண்பலை ஆகியவற்றின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் வாதாடினர்.
“பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு காரணமாக தயாநிதிமாறன் ரூ.443 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், முதல் தகவல் அறிக்கையில் ரூ.1.16 கோடி மட்டுமே இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் எவ்வித சட்டப்பின்னணியும் இல்லை. பொருளாதார குற்றம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கருத முடியாது. சன் குழுமத்துக்கு 49 பண்பலைகள் உள்ளன. இவற்றில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எதுவும் நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது பாதுகாப்புக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக புகார் எதுவும் கிடையாது” என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் வாதிடும்போது, “சன் குழுமத்தை ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தால், அரசைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள். தலைமறைவாக உள்ள தாவுத் இப்ராஹிமுக்கு எந்த வழக்கிலும் தண்டனை வழங்கப்படவில்லை என்பதற்காக அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.சத்தியநாராயணன், பண்பலை ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க உத்தரவிட கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் பிரதான மனுக்களுக்கு மத்திய அரசு 8 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.