

சென்னை
ஆந்திரா கிளப் தேர்தல் முன்விரோதம் காரணமாக தொழிலதிபர் மீது கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் ஆந்திரா கிளப் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு வந்துள்ளது.
சில ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சில வாரங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் தொழிலதிபர் ஸ்ரீதர் என்பவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ஆந்திரா கிளப் அருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஸ்ரீதரை பைக்கில் வந்த இளைஞர்கள் கிரிக்கெட் பேட்டால் தாக்கிவிட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த ஸ்ரீதர் ரெட்டி சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இந்த தாக்குதல் குறித்து புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்பட்டது.
இதில், தாக்குதலில் ஈடுபட்டது செய்யூரைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர்கள் சிவக்குமார், சுதாகர், திருவான்மியூரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீதர் மீது கூலிப்படையை ஏவியதாக தியாகராய நகரைச் சேர்ந்த முன்னாள் அரசு ஒப்பந்ததாரர் ஜனார்த்தன ரெட்டி (60) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ராஜேஷ், சென்னை தெற்கு மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளராக உள்ளார். இவர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் வேலை செய்து வந்தார்.
மேலும் தலைமறைவாக உள்ள தமிழரசு என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திரா கிளப் தேர்தல் தொடர்பான முன்விரோதத்தில் தாக்குதல் நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.