Published : 21 Jul 2019 10:21 AM
Last Updated : 21 Jul 2019 10:21 AM

தெரு நாய்களை அரவணைக்கும் மதுரை பெண்; வீதி வீதியாகச் சென்று உணவு கொடுத்து மகிழ்கிறார்

தெரு நாய்க்கு உணவு வழங்கும் மும்தாஜ் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

உணவு கிடைக்காமல் பட்டினியால் மரணமடையும் மனிதர்களையே கண்டுகொள்ளாத இந்த சமூகத்தில் மதுரையைச் சேர்ந்த மும்தாஜ் (53) என்பவர், தினமும் இரவு வேளையில் தெரு நாய்களைத் தேடிச் சென்று வாஞ்சையுடன் உணவு கொடுத்து வருகிறார்.

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் மும்தாஜ். இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

‘பேஷன் டிசைனிங்’ படித்து விட்டு மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து தனது குழந் தைகளை ஆளாக்கினார். தற்போது மகன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். மகள் கல்லூரியில் முதுகலை படிக்கிறார்.

பிராணிகள் மீது மும்தாஜுக்கு சிறு வயது முதல் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் கணவர், குழந்தைகள் என்ற வட்டத்தைத் தாண்டி அவரால் பிராணிகளை நேசிக்க முடியவில்லை.

இருப்பினும் வாய்ப்புக் கிடைக் கும் போதெல்லாம் வாயில்லா ஜீவன்களை நேசிக்கத் தவறு வதில்லை.

குழந்தைகள் வளர்ந்து ஓரளவு பெரியவர்களான நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இவர் தினமும் ஸ்கூட்டரில் சாப்பாடு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு தெரு நாய்களுக்கு உணவு கொடுத்து அவற்றின் மீது பரிவு காட்டுகிறார். மேலும், ‘ஊர்வனம்’ என்ற பிராணிகள் நல அமைப்பில் சேர்ந்து தன்னார்வப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.

சாலைகளில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாய்களையும், பறவைகளையும் மீட்டு அவற்றை கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை வழங்கி குண மடைந்ததும் மீண்டும் மீட்கப்பட்ட இடத்திலேயே கொண்டு போய் விடுகிறார்.

தெரு நாய்களுக்கு மற்ற வர்களைப் போல் இவர் மீதமான உணவுகளை மட்டுமே வழங்குவது கிடையாது.

சில சமயம் கோழி இறைச்சிக் குழம்பு சாப்பாடு, ஆட்டு எலும்பு இறைச்சி போன்றவற்றை சமைத்து எடுத்து வந்து வழங்குகிறார்.

தினமும் மும்தாஜ் சாப்பாடு கொடுக்க வருவதால் அவரைப் பார்த்ததும் தெரு நாய்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்கின்றன. அவர் ஸ்கூட்டரில் சாப்பாட்டுடன் வருவதைப் பார்த்த தெரு நாய்கள், கும்பலாக அவரைச் சூழ்ந்து கொண்டு தாவிக் குதிக்கின்றன. பாசத்துடன் அதட்டும் மும்தாஜ், ஒரு பேப்பரை விரித்து அதில் சாப்பாடு, இறைச்சிக் குழம்பை வைக்கிறார்.

தெரு நாய்கள் அனைத்தும் சாப்பிட்டு முடித்த பின்பே அந்த இடத்தை விட்டு நகருகிறார். அவர் செல்லமாக அந்த தெரு நாய்களை தடவி விட்டபடி அடுத்த தெருவுக்குச் செல்கிறார்.

மதுரை நகரில் கோமதிபுரம், கே.கே.நகர், அண்ணா நகர், கோ.புதூர் என நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான தெரு நாய்களுக்கு அவர் உணவு வழங்குகிறார். இதற்காக, அவர் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிச் செலவு செய்கிறார்.

கேகே.நகரில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கிய நேரத்தில் மும்தாஜிடம் பேசியபோது, ‘‘மனிதர்கள், மனிதர்களிடம் மட்டுமே பாசமும், அக்கறையும் காட்டுகிறார்கள். நாம் பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கிறோம். ஆனால், வாயில்லா ஜீவன்களால் அப்படி கேட்க முடியாது. பசியை தாங்கவும் அவைகளால் முடியாது.

பிராணிகளிடம் பாசம் காட்டுவதை கவுரவக் குறைச் சலாக கருதுகிறோம். பிராணிகளிடமும் பாசத்தைக் காட்டிப்பாருங்கள். வாழ்க்கை மிகவும் அழகாகும். நாய்களுக்கு சாப்பாடு கொடுக்க ஒரு தொகை தேவைப்படுவதால் அவைகளுக்கும் சேர்த்து உழைக்க வேண்டி உள்ளது. அதுவும் ஒரு சுகமான சுமையாகவே கருதுகிறேன், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x