

திருச்சி
காதல் வயப்பட்டு வீட்டைவிட்டுச் செல்வதை தடுப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்க கல்லூரி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி சரகத்திலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி எம்ஏஎம் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. திருச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக், அரியலூர் எஸ்.பி னிவாசன், எம்ஏஎம் கல்லூரி முதல்வர் ரவிமாறன், இயக்குநர் சர்வதயாபரன் மற்றும் 200 கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
இதில், திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
திருச்சி காவல் சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது காதல் வயப்பட்டு வீட்டைவிட்டுச் சென்றதைத் தொடர்ந்து, 40 சிறுவர் மாயமான வழக்குகளும், 154 சிறுமி மாயமான வழக்குகளும், 119 பெண்கள் மாயமான வழக்குகளும், 8 ஆண்கள் மாயமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போக்ஸோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டம், பணியிடங்களில் பாலியல் தொந்தரவு குறித்தச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்கொலையை தடுக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும். இதேபோல, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காதல் வயப்பட்டு வீட்டைவிட்டுச் செல்வதை தடுப்பதற்கும் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களின் அருகே போதை மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இப்பிரச்சினைகளுக்கு காவல்துறையினருடன் சேர்ந்து தீர்வு காண இருபாலர் கல்லூரிகளில் போலீஸ் பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப், ஆண்கள் கல்லூரிகளில் போலீஸ் பாய்ஸ் கிளப், மகளிர் கல்லூரிகளில் போலீஸ் கேர்ள்ஸ் கிளப் அமைக்க வேண்டும் என்றார்.