

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் வாராப் பூர் ஊராட்சி நெம்மேலிப் பட்டியைச் சேர்ந்தவர் பி.அனுராதா(27). தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.
இவர், சமோவ் தீவில் ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்று, தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் படைத்தார்.
இதையடுத்து, அங்கிருந்து கடந்த 18-ம் தேதி புதுக்கோட்டைக்கு வந்த அனுராதா, ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், முக்கிய தலை வர்களை சந்திப்பதற்காக மறுநாள் சென்னைக்கு சென்றுவிட்டு, நேற்று ஊர் திரும்பினார்.
இந்நிலையில், “மாவட்ட ஆட்சியரின் வாழ்த்துகளை பெற்ற போதும், அனுராதாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பாதது வேதனை அளிக்கிறது” என நெம்மேலிப்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அனுராதாவை சந்தித்த அதிமுக பிரமுகர்கள், முதல்வரை சந்திக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயாஸ்கர் மூலம் ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றனர்.
இதுகுறித்து அனுராதா கூறியபோது, “தமிழக முதல்வர் எப்போது நேரம் ஒதுக்கிக் கொடுத் தாலும், அவரை சந்தித்து வாழ்த்து பெறத் தயாராக உள்ளேன். அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.