Published : 21 Jul 2019 10:08 AM
Last Updated : 21 Jul 2019 10:08 AM

எண்ணேகொல்புதூரில் இருந்து படேதலாவ் ஏரிக்கு கால்வாய் அமைக்கும் திட்டம்; நிலம் எடுப்பு தொடர்பாக அரசுக்கு முன்மொழிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

எஸ்.கே.ரமேஷ் 

கிருஷ்ணகிரி 

எண்ணேகொல்புதூரில் இருந்து படேதலாவ் ஏரிக்கு கால்வாய் அமைப்பதற்குத் தேவையான நிலம் எடுப்பு தொடர்பாக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப் பள்ளி ஊராட்சியில் 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது படேதலாவ் ஏரி என்கிற பெரிய ஏரி. மார்க்கண்டேய நதியில் இருந்து கால்வாய் மூலம் இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 9 ஊராட்சிகள், பர்கூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

மார்க்கண்டேய நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வராததால் கடந்த பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது படேதலாவ் ஏரி. ஏரி வறண்டதால் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து, விவசாயமும் செய்ய முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எண்ணே கொல்புதூர் தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் படே தலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

எண்ணேகொல்புதூர் அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுறத்தில் புதிய வழங்கு கால்வாய் அமைத்து,தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது வரும் உபரி நீரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு வழங்கும் திட்டத்துக்கு ரூ.276 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பொதுப் பணித் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘தருமபுரி மாவட்டத்துக்கு செல்லும் புதிய வலது புற பிரதான கால்வாயின் நீளம் 50.65 கி.மீ. இதற்காக 285.23 ஏக்கர் பட்டா நிலம், 77.79 ஏக்கர் புறம்போக்கு நிலம், 26.12 ஏக்கர் வன நிலம் கையகப்படுத்த வேண்டும். இதேபோன்று, படேதலாவ் ஏரிக்கு அமைக்கப்பட உள்ள புதிய இடதுபுற பிரதான கால்வாயின் நீளம் 23 கி.மீ. இதற்காக 155.81 ஏக்கர் பட்டா நிலம், 18.57 ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண் டும். நிலம் எடுப்பு தொடர்பாக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்,’’ என்றனர்.

தடுப்பணைகளால் பாதிப்பு

கர்நாடக மாநில எல்லையான முத்தியால்மடுகு என்கிற மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறு, சிறு ஓடைகள் சேர்ந்து மார்க்கண்டேய நதி உருவாகிறது. இந்த நதியில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மம்மா ஏரியில் இருந்து வரும் தண்ணீரும் கலக்கிறது. பாலனப்பள்ளி, சிங்கரிப்பள்ளி, மாரசந்திரம், குருபரப்பள்ளி வழியாக செல்லும் நதி, தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த நதியின் குறுக்கே, குப்பச்சிபாறை - மாரச்சந்திரம் இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக வெளியேறும் நீர், மாரசந்திரம், ஜீனூர், கொரல்நத்தம், ஜிங்கலூர், வீரோஜிபள்ளி, நெடுமருதி, திப்பனப்பள்ளி, பண்டப்பள்ளி, கொத்தூர், தளவாப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சாமந்தமலை வழியாக கல்லுகுறி வந்து கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியை வந்தடைகிறது. கர்நாடக அரசு, அதன் எல்லையில் கட்டிய தடுப்பணைகள் மற்றும் பருவமழை பொய்த்துப் போனதால், மார்கண்டேய நதியில் நீர் வரத்து முற்றிலும் நின்றது.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு, பெய்த கனமழையால் மார்க்கண்டேய நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து மாரச்சந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கால்வாய் வழியாக தண்ணீர் சென்றது. படேதலாவ் ஏரி நிரம்பி முதன் முறையாக பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், மழையின்றி மார்க்கண்டேய நதியில் தண்ணீர் வராததால், படேதலாவ் ஏரியும் வறண்டு கிடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x