Published : 21 Jul 2019 09:55 AM
Last Updated : 21 Jul 2019 09:55 AM

உடுமலையில் வெண்பட்டு சந்தை!- தமிழகத்திலேயே உற்பத்தியில் முதலிடம்...

எம்.நாகராஜன்

தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்கும் என்ற நம்பிக்கையுடன், வறட்சியான பகுதிகளில்கூட  மல்பெரி சாகுபடியை தேர்வு செய்கின்றனர் விவசாயிகள். தமிழகத்திலேயே அதிக பரப்பில், அதிக அளவில் வெண்பட்டு உற்பத்தி செய்யப்படுவது உடுமலையில்தான்.

ஒரு ஏக்கரில் 5,500 மல்பெரி நாற்றுகள் வரை நடவு செய்யலாம்.  6 மாதங்களில் அறுவடை கிடைக்கும். 20 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும் என்றாலும்,  10 ஆண்டுகளுக்கு அதிக பலன் கிடைக்கும். இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து நேரடியாக விவசாயிகளுக்கு பட்டுப்புழுக்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அரசும் பல உதவிகளை செய்கிறது. பராமரிப்புக்கு குறைந்த ஆட்கள் போதும் என்பதால், விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பு கைகொடுக்கிறது.

உடுமலையில் செயல்படும் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில், உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, பொங்கலூர், குடிமங்கலம், மடத்துக்குளம்  பகுதிகளில் 4,000 ஏக்கரில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. மாதத்துக்கு ஒரு லட்சம் கிலோ வரை உற்பத்தியாகிறது.

கடந்த ஆண்டு மாநிலத்தில் அதிக உற்பத்திக்கான விருதும் உடுமலைக்கு கிடைத்துள்ளது. உடுமலை விவசாயி  ஈஸ்வரமூர்த்தி சிறந்த விவசாயியாக தேர்வு செய்யப்பட்டு,  விருதும், பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். 

வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, பட்டு உற்பத்திக்குத் தேவையான தட்பவெப்ப நிலை உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவுவதே அதிக உற்பத்திக்கு காரணம். எனினும், விற்பனைக்கு கர்நாடகா மாநிலம் ராம்நகர் சந்தையை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த நிலையை மாற்றி, உடுமலையிலேயே நிரந்தர சந்தையை அமைக்க வேண்டுமென விவசாயிகள், பட்டுக்கூடு வளர்ப்போர் வலியுறுத்தி உள்ளனர். அரசின் சிறந்த விவசாயி விருது பெற்ற ஆமந்தகடவு பொன்ராஜ் (38) கூறும்போது, “மற்ற பயிர் சாகுபடியில்  6 மாதங்கள் அல்லது ஆண்டுக்கு  ஒருமுறை மட்டுமே வருமானம் கிடைக்கும். ஆனால், மல்பெரியில் 40 நாட்களுக்கு ஒருமுறை வருமானம் ஈட்டமுடியும்.  வெண்பட்டுக் கூடுகளுக்கு நிரந்தர விலை இல்லை. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்றமும், இறக்கமும் உள்ளது.  சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.250-க்கு  கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது முதல் தரம் கிலோ ரூ.400, இரண்டாம் தரம் ரூ.360, மூன்றாம் தரம் ரூ.250 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. வறட்சியால் அவதிப்படுவோருக்கு இத்தொழில் லாபம் தருகிறது. உடுமலையில் நிரந்தர சந்தையும், தானியங்கி பட்டு நூல் உற்பத்தி ஆலைகளும் அமைந்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

பனியன் நிறுவனங்களால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏழு மணி நேர விவசாய வேலைக்கு ரூ.400 கூலி கொடுத்தாலும், வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினைக்கு அரசு தீர்வுகாண வேண்டும்” என்றார். 
உடுமலைப்பேட்டை பட்டு தொகுப்பு சங்கத்  தலைவர் எம்.பழனிசாமி கூறும்போது, “தமிழகத்திலேயே உயர்தரமான வெண்பட்டு உற்பத்தியில் உடுமலை முன்னிலை வகிக்கிறது. இளம்புழுக்களை  பிரத்யேகமான அறையில்,  27 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். கர்நாடகா, ராம்நகர் சந்தையில் ஆன்லைன் முறையில் ஏலம் நடத்தப்படுகிறது. எனினும், சந்தைக்கு வெளியிலேயே விவசாயிகளை ஏமாற்றி,  குறைந்த விலையில் கொள்முதல் செய்யும் போக்கும் உள்ளது. கோவை, தருமபுரியில் அரசு சார்பில் சந்தைகள் இருந்தாலும், பணம் பட்டுவாடா செய்ய ஒரு மாத காலமாகிறது. மேலும், எதிர்பார்க்கும்  விலை கிடைப்பதில்லை. பராமரிப்பு சரியாக இருந்தால்,  ஏக்கருக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் கிடைக்கும். உடுமலையிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை அவசியம்” என்றார்.

“மத்திய அரசு  2010-11-ல்  30 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை, 5 சதவீதமாக குறைத்தது. சீனாவிலிருந்து அதிக அளவில் வெண்பட்டு இறக்குமதி செய்யப்படுவதால்,  உள்நாட்டு பட்டுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.  உற்பத்தி செலவைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி தொழில் செய்யும் விவசாயிகள், வட்டி கட்டக்கூட முடியாமல் தவிக்கின்றனர். சாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பட்டு உற்பத்திக்கு ஆதார விலையாக ரூ.450 வழங்க வேண்டும். விலை வீழ்ச்சிக் காலங்களில் மாநில அரசு கிலோவுக்கு ரூ.150 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உற்பத்தியாகும் 70 சதவீதம் பட்டுக்கூடு விற்பனைக்கு,  ராம் நகர் சந்தையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. உள்ளூர் முகவர்களும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். எனவே,  தமிழகத்தில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளை அரசு பட்டுக்கூடு அங்காடிகளிலேயே கொள்முதல் செய்ய வேண்டும். நலிவுற்ற பட்டு நூற்பாலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்புழு வளர்ப்புக்கு 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்” என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “உடுமலை சுற்றுவட்டாரத்தில் 2,000 விவசாயிகள் மல்பெரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.  மானுப்பட்டி, கேத்தனூர், சின்னவீரம்பட்டியில் இளம் புழு உற்பத்தி மையம் இயங்குகிறது. வெண்பட்டுக்கூடுக்கு கிலோவுக்கு  ரூ.400 வரை விலை கிடைக்கிறது. நாற்று, சொட்டு நீர், பட்டுப்புழு வளர்ப்பு குடில் அமைத்தல் ஆகியவற்றுக்காக அரசு மானியம் அளிக்கிறது.  தற்போது 3-ஆக உள்ள பட்டு நூல் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கையை 7-ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. உடுமலை அருகே மைவாடி கிராமத்தில், பட்டு வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான இடத்தில் கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், விரைவில்  சந்தை தொடங்கும்.  இதன் மூலம், கர்நாடக மாநிலத்தில் தற்போது கிடைக்கும் விலையைக் காட்டிலும், கூடுதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x