Published : 21 Jul 2019 09:52 AM
Last Updated : 21 Jul 2019 09:52 AM

புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும்!- ஒற்றுமைக்கு உதாரணமான ‘ஆனந்தாஸ்’ நண்பர்கள் 

 த.செ.ஞானவேல்

ஓடாத கடிகாரமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு அது இரண்டுமுறை சரியான நேரத்தைக் காட்டும் என்பார்கள். லட்சியத்தை நோக்கி ஓடுவது என்று முடிவெடுத்த பிறகு, 24 மணி நேரமும் நிற்காமல் இயங்குவதற்கு தயாராகவே இருக்கிறோம். தனித்தனியாக போராடிக் கொண்டிருக்காமல், நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து போராடியதுதான் எங்கள் வெற்றிக்கு அடிப்படை”  என்று  கூறுகிறார் மணிகண்டன்.  உழைப்பின் ருசியை அறிந்த நான்கு இளைஞர்கள், புதிய முயற்சிகளாலும், உணவின் ருசியாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தனர்.  கோவை ‘ஆனந்தாஸ்’ உணவகம் வெற்றி பெற்ற கதையும், அவர்களின் உணவைப்போலவே ருசிகரமாக இருக்கிறது.

“வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுபோல, வந்தாரை வளர்த்துவிடும் கொங்கு மண் என்று மனப்பூர்வமாக எங்களால் சொல்லமுடியும். திருநெல்வேலியில் என் அப்பா புருஷோத்தமன், ஹோட்டல் நடத்தி வந்தார். தொழிலுக்காக தன்னை ஒப்புக்கொடுத்தவர். அடிமட்டத்திலிருந்து உழைப்பையே மூலதனமாக்கி, தன்னிறைவான வாழ்வு வாழ்ந்தார்.  இந்தநிலையில், எங்கள்  குடும்பம் கடனில் சிக்கியது.

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால், விரைவில் முன்னேறலாம் என்ற ஆசையின் பொறி மனதில் விழ, ஹோட்டல் தொழிலில் கவனம் குறைத்து, ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வமானார் அப்பா. தெரிந்த தொழிலைவிட்டு,  தெரியாத தொழிலில் கவனம் செலுத்தினால் என்ன நடக்குமோ அதுவே நடந்தது. வீடு உள்ளிட்ட எல்லாவற்றையும் விற்றபிறகும்,  கடனில் இருந்து மீளமுடியவில்லை. நான் பள்ளியில் படிக்கும்போதே குடும்பம் தத்தளிக்கத் தொடங்கியது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இருந்ததில்லை. விளையாட்டுத்தனமாக நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதுதான்,  என்னுடைய பிரதான பொழுதுபோக்கு.

பதினொன்றாம் வகுப்பில் தமிழாசிரியராக வந்த குமாரசாமி ஆசிரியரை, என் வாழ்வில் மறக்கவே முடியாது. இலக்கிய பாடத்தைக்கூட ஆடலும் பாடலுமாக நடத்துவார். அவர்தான் என் மனதில் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்தார். ஒருநாள் வகுப்பில், ‘வாழ்வில் நீங்கள் எல்லாம் என்னவாகப்  போகிறீர்கள்?’ என்று மாணவர்களிடம் கேட்டார்.

டாக்டராவோம், இன்ஜினீயராவோம் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஐந்து பேர் மட்டும் சொந்தமாக தொழில் செய்வோம் என்று கைதூக்கினோம். அதில் 5-வது நபராக தயங்கித்  தயங்கி கைஉயர்த்தியவன் நான். அப்பாவைப் பார்த்து வளர்ந்த காரணத்தால், சொந்தமாக ஹோட்டல் வைப்பேன் என்று சொன்னேன். தொழில் செய்யப் போகிறேன் என்று சொன்ன ஐந்து பேரையும் வெகுவாகப் பாராட்டினார் ஆசிரியர். ‘தொழில் செய்பவர்கள்தான் அதிகமாக வரி கட்டுவார்கள். நாட்டின் வளர்ச்சிக்குத் துணையாக இருப்பார்கள்’  என்று புதிய கோணங்களை விளக்கினார். 

12-ம் வகுப்பு முடியும்வரை, நாங்கள் சொன்னதை நினைவூட்டிக்கொண்டே இருப்பார் எங்கள் ஆசிரியர். சென்னை பாண்டிபஜார் பாலாஜி பவன் நிறுவனர் திருவேங்கடம் எங்களுக்கு தூரத்து உறவினர். அளவு கடந்து தொழிலை நேசித்தவர். இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தாலும், நண்பர்களுடன் சென்னைக்கு கிளம்பிப்  போய்விடுவேன். பெரியவரின் தொழில் நேர்த்தியை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் பெற்றவர்களாக நாங்கள் இருந்தோம்.  சுடச்சுட சாம்பார் கொதித்து இறக்கி மூடியைத் திறக்கும்போது வரும் வாசத்தை வைத்து, சாம்பாரில் உப்பு குறைவு என்று சொல்லுவார்.  உணவுப் பொருளின் தன்மையை மூச்சுக் காற்றில் உணர்ந்துவிடுவார். சின்ன வயதில் இதையெல்லாம் கவனிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.

கல்லூரியில் படிக்க சென்னைக்கோ, கோவைக்கோ செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்ததும், புதிய ஊரில் நன்றாக ஊர் சுற்றலாம் என்ற மனநிலையுடன் இருந்தேன்.  கல்லூரியில் இளம் வயதில் தொழில் ஆர்வம் மிக்கவர்களை இங்குதான் முதன்முதலாக சந்தித்தேன்.  

அப்போதும் மனம்போனபோக்கில் வாழ்வதே பிடித்திருந்தது. தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் செயலாக மாறவில்லை என்றாலும், என் கனவை கோவை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

நான், வெங்கடேஷ், நம்மாழ்வார், நாராயண ராம் ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருந்தோம். எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும், நால்வரும் இணைந்து செய்ய வேண்டும் என்பதே எங்களிடம் இருந்த ஒரே தெளிவு. சொந்தமாக தொழில் செய்ய முதலீட்டுக்கு எங்கே போவது என்றும் தெரியவில்லை. எங்கள் நான்கு பேரிடமும் பொருளாதார வசதியும் இல்லை. கோவையில் ஹோட்டல் நடத்த சில இடங்களை தேர்வு செய்து பார்த்தபோது, பெரிய முதலீடு இல்லாமல், தொழில் செய்ய முடியாது என்ற உண்மை புரிந்தது. அதனால், மீண்டும் ஊருக்குத் திரும்பினேன். 

கல்லூரியில் படித்த நண்பர்களை சந்திக்க கோவை வந்துபோவது வழக்கம். 1998-ல் பிப்ரவரி 14-ம் தேதி தற்செயலாக கோவை வந்தேன். அப்போது ஒரு அரசியல் தலைவரைக் குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஊரே கலவர பூமியானது. 
காதலர் தினத்தில் வெறுப்பு விதைக்கப்பட்டது. அதுவரை நான் பார்த்திராத கோவையாக அது இருந்தது. இயல்புநிலை திரும்பியதும் ஊருக்குப்போக இருந்த நிலையில், ‘காந்திபுரத்தில் ஏற்கெனவே நடந்து கொண்டிருந்த ஹோட்டலை  அப்படியே  ஏற்று நடத்த முடியுமா?’ என்று கேட்டனர். கலவரத்தில் பயந்துபோன உரிமையாளர், குறைந்த விலைக்கு இடத்தை குத்தகைக்கு கொடுக்க முன்வந்தார். 

குறைந்த முதலீடு என்பதே ஆறு லட்சமாக இருந்தது. கடவுளாகப் பார்த்து தருகிற வாய்ப்பு, துணிந்து இறங்குவோம் என்று நான்கு நண்பர்களும் கடனை வாங்கி, ஹோட்டல் திறக்க முடிவுசெய்தோம். 

கடன் வசூல் செய்ய, நெல்லையிலிருந்து ஆட்கள் கோவைக்கு வந்து ரூம் போட்டு தங்குவார்கள். அந்த லாட்ஜ் வாடகையையும் சேர்த்து நாங்களே கொடுக்க வேண்டும். சம்பாதிப்பதும், கடனை அடைப்பதுமாக, போராட்டமாகவே வாழ்க்கைபோய்க்  கொண்டிருந்தது. மாதம் ரூ.5,000கூட கையில் நிற்காது. சில நேரம் ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடுவதுகூட சிரமமாக இருக்கும். ஹோட்டல் முதலாளியாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தோம் என்பதே உண்மை.

அப்பாவுக்கு ஹோட்டல் தொழிலில் நிறைய அனுபவம் இருந்ததால், எங்களது குறைகளை நிவர்த்தி செய்து வழிகாட்டுவதில் பெரிய பங்கு வகித்தார். காலை 5.30 மணிக்கு ஹோட்டலில் இருப்பார். ஏற்கெனவே இருந்த பெயரை மாற்றி, 2000-ம் ஆண்டில் ‘ஆனந்தாஸ்’ என்று பெயர் வைத்தோம். அப்போதும் பிராண்ட்  மதிப்பெல்லாம் தெரியாது. 

ஒரேயொரு ஹோட்டலை வைத்து, அதில் நான்கு பேரின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது  என்பதை உணர்ந்தோம். எல்லோரும் திருமண வயதில் இருந்தபோது, எங்களை நம்பி பெண் கொடுப்பார்களா என்ற சந்தேகம்கூட வந்தது. அடுத்து சுந்தராபுரத்தில் ஒரு கிளை திறக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடனை வாங்கி,  அடுத்தடுத்து நான்கு கிளைகளைத் தொடங்கினோம்.
எங்கள் குறை, நிறைகளை சுட்டிக்காட்டுகிற  வாடிக்கையாளர்கள், தினமும் எங்களை தூண்டிக்கொண்டே இருந்தார்கள். வாடிக்கையாளரை மனத் திருப்தி அடையச்  செய்ய முடியவில்லை என்றால், எதற்காக நாம் இந்த வேலை செய்ய வேண்டும் என்ற கேள்வி வந்தது.

ஐந்தாவது கிளையை, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எதிரில் தொடங்கும்போதுதான், அதற்கான விடையைக் கண்டறிந்தோம். மதிய சாப்பாட்டிலிருந்து எங்களுடைய மாற்றம் தொடங்கியது. 
பொதுவாக ஹோட்டல்களில் சாப்பாட்டுடன்,  தயிரையும் சேர்த்தே தருவார்கள். அதனால் ஐந்து ரூபாய் கூடுதலாக விலை வைக்க வேண்டியிருக்கும். மோர் தரமற்றதாக இருக்கும். அதேபோல, பொறியல், பாயாசம் போன்றவை பெயருக்கு தருவதாக இருக்குமேதவிர, ருசியாக இருக்காது. 

மற்றவர்கள் இரண்டு காய்கறிகள் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், இரண்டு பொறியல், ஒரு பச்சடி என்று 3 காய்கறிகளாக வழங்கினோம். தயிர் தேவைப்படாத அளவுக்கு தரமான மோர் வழங்கினோம். இதனால்,  கொஞ்சம் விலைகுறைத்து சாப்பாடு விற்பனை செய்ய முடிந்தது. 

எங்களின் இந்த முயற்சியை,  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். தரமான உணவைக் கொடுத்ததால் வயிறார உண்டு, மனதாரப் பாராட்டினர்.

உபசரிப்பது எங்களுடைய இயல்பாகவே இருந்தது. அதை பலமாக உணராமல்  இருந்தோம்.  கடுமையானவர் என்று பெயர் எடுத்திருந்த வருமானவரித் துறை அதிகாரி ஒருவர், திருவண்ணாமலையில் குடும்பம் இருந்த காரணத்தால், தினமும் எங்கள் ஹோட்டலில் சாப்பிடுவார். ‘டெரர் அதிகாரி’ என்று மற்றவர்கள் பயப்படுகிற நபர், எங்களிடம் சிரித்துப் பேசுவார்.
‘என்னைப்போலவே, எல்லா வாடிக்கையாளர்களையும் இன்முகத்தோடு உபசரிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் கடைக்கு தினமும் வருகிறேன்’ என்று அவர் கூறியபோதுதான், உபசரிப்பு எங்களின் பலம் என்றே உணர்ந்தோம். எங்கள்மீது தவறே இல்லை என்றாலும், சண்டை போடுகிற வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்போம்.  ‘இந்த ஒரு முறை பொறுத்துக்கோங்க. அடுத்து ஒரு வாய்ப்பு கொடுங்க’ என்று பணிவாக கூறும்போது, வாடிக்கையாளரும் கோபம் தணிந்து, மனதளவில் எங்களோடு நெருக்கமாயினர். 

நண்பர்கள் நால்வருக்கும் தனித் தனி திறன்கள் இருந்தன. அவற்றை ஒருங்கிணைத்து,  வாடிக்கையாளர்களுக்கு என்ன புதிய அனுபவத்தை தருவது என்று எப்போதும் சிந்திப்போம். சுத்தம், சுவை, துரித சேவை இந்த மூன்றும்தான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. எங்கள் கிளைகளில் இந்த மூன்றும் கிடைப்பதை உறுதி செய்தோம். எல்லா கிளைகளிலும் ஒரே சுவை என்பது,  பெரிய சவாலாக இருந்தது. 

எந்த பின்புலமும் இல்லாமல், வளரும் நிலையில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள், ‘சென்டரலைஸ்டு கிச்சன்’ தொடங்க முதலீடு செய்வது பெரிய ரிஸ்காக இருந்தது. ஆனாலும், நம்பிக்கை இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக நடந்துகொண்டால், அவர்கள் கைவிடமாட்டார்கள் என்று நம்பினோம். அதற்குப் பலனும் கிடைத்தது. ‘எல்லா கிளைகளிலும் ஒரே சுவை, ஒரே தரம்’ என்ற எங்கள் லட்சியம் நிறைவேறியது.

கோவையில் பெரும்பாலான மக்களுக்கு, ஹோட்டலுக்கு வந்து குடும்பத்துடன் சாப்பிடுவது முக்கியமான பொழுதுபோக்கு. ஒரு சாதாரண ஹோட்டலில் சாப்பிடுகிறோம் என்ற உணர்வு இல்லாமல், ‘ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுகிறோம்’ என்ற உணர்வு வரும் வகையில் புதிய கிளைகளை ரசனையுடன் வடிவமைத்தோம்.

ஒரே இல்லத்தில் நான்கு குடும்பமும் கூட்டுக் குடும்பமாக இருந்த காரணத்தால், எப்போதும் தொழில் குறித்த உரையாடல் அதிகம் இருக்கும். 

‘ஆனந்தாஸ்’ கிளைகள் அதிகரிக்கத் தொடங்கியதும், தனித் தனியாக வீடுகளை,  கிளைகள் அருகில் மாற்றிக்கொண்டோம். அதனால், எந்தப் பிரச்சினை வந்தாலும், சரிசெய்ய யாரேனும் ஒருவர் உடனடியாக சென்றுவிட முடிந்தது. கூட்டு முயற்சியில் சிறப்பாக தொழிலை வளர்த்தெடுப்பதில்,  மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவே இருந்தோம்.
வாடிக்கையாளர்களே எங்களை எப்போதும் அடுத்த இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். ‘அதே இட்லி, தோசை தானா? வெரைட்டியாக  எதுவும் இல்லையா?’ என்ற ஒரு வாடிக்கையாளரின் கேள்வி, எங்களுக்குப் புதிய பாதையைத் திறந்துவிட்டது. 
10 வகையான  உணவு இருக்க வேண்டிய இடத்தில், 250 வகையான உணவு வகைகளைக் கண்டறிந்து,  அதை தரமாகவும், ருசியாகவும் செய்து பரிமாறினோம்.  வாரத்துக்கு ஒருமுறை மெனு கார்டு மாறிக்கொண்டே இருக்கும். பல ஊர்களுக்கு பயணம் செய்து, அங்கே  சிறப்பாக இருக்கிற உணவுகளைக் கண்டறிந்து, கோவையில் வழங்குவதை  வழக்கமாக்கிக்  கொண்டோம். ‘ஆனந்தாஸ்’ என்றால் வெரைட்டியான உணவு என்று கருதும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறோம். அதுவே எங்களது பிராண்ட் மதிப்பை உயர்த்தியது.

2010-ல் கோவை லட்சுமி மில்ஸ் அருகில் தொடங்கிய புதிய கிளையில் ‘டயட் டிபன்’  அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிக்கு அமோக ஆதரவு கிடைத்தது. மாலையில் நாங்கள் அறிமுகப்படுத்திய உணவு வகைகளை, கோவையின் பெரும்பாலான ஹோட்டல்களில் வழங்கும் நிலை உருவானது.

உணவகத்தின் நன்மதிப்பு ஊழியர்களின் கையில் இருக்கிறது என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பணியாளர்களின்  நடத்தையே,  நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. அவர்கள் மனநிறைவுடன் இல்லாமல் போனால், அது உணவின் சுவையில் எதிரொலிக்கும். அதனால், பணியாளர்களை குடும்ப உறுப்பினர்களாக கருதி, அவர்களது  நலனுக்கு முன்னுரிமை அளிப்போம். எங்கள் குழந்தைகள் வளர்ந்த பிறகு,  நான்கு பேரின் இல்லத்தரசிகள் தொழிலில் பங்களிக்க  முன்வந்தனர். பெண்கள் பொறுப்பேற்கத் தொடங்கியதும், நாங்கள் கவனக்குறைவாக செய்கிற சிறு தவறுகளும்  குறையத் தொடங்கியது.

தொழிலை தரமாகவும், புதுமையாகவும் விரிவாக்கம் செய்ய, நான்கு குடும்பங்களின் ஒற்றுமை வரமாக அமைந்தது. ஒத்த கருத்துடைய நண்பர்களாக இணைந்து, ஈகோ இல்லாமல் பணியாற்றும்போது வெற்றி நிச்சயம் என்பதே எங்கள் அனுபவம். ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறோம். இத்தனை பேரின் பசியாற்றுகிற வாய்ப்புக் கிடைத்ததை கடவுள் அளித்த பாக்கியமாகவே கருதுகிறோம்”  என்கிற மணிகண்டன் உட்பட நான்கு நண்பர்களும்,  வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்குவதில் ஆர்வம் குறையாமல் இருக்கிறார்கள்.  வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியே, நிரந்தர வளர்ச்சி என்பதை நால்வரும் உணர்ந்தே செயல்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x