

சென்னை
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏ.பிரபு, நேற்று முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தார்.
அதிமுகவில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைந்தன. அந்த சூழலில் டி.டி.வி.தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டார். இதை எதிர்த்து, அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தினகரனுக்கு ஆதரவாக மாறினர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி(அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருதாச்சலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கினர்.
இவர்கள் 3 பேர் மீதும் பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுப்பதற்காக நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அதற்கு இவர்கள் உச்சநீதிமன்றத்தில் தடைபெற்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து தாங்கள் அதிமுக எம்எல்ஏக்களாகவே செயல்படுவதாக தெரிவித்தனர். ஆனால், பிரபு மட்டும் முதல்வரிடம் நேரம் கேட்டு காத்திருந்தார். பேரவை கூட்டம் முடிந்த நிலையில் நேற்று முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேற்று பிரபு சந்தித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் மோகன், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான குமரகுரு, பிரபுவின் தந்தை வி.அய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். இதன் மூலம் டி.டி.வி.தினகரனுக்கு இருந்த ஒரு எம்எல்ஏ ஆதரவும் பறிபோயுள்ளது.