Published : 20 Jul 2019 07:09 PM
Last Updated : 20 Jul 2019 07:09 PM

ஆளுநர் பதவி என்பது அண்ணா சொன்ன ‘ஆட்டுக்கு தாடி’என்ற எண்ணத்தில்தான் திமுக உள்ளது: பேரவையில் ஸ்டாலின்

ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒரு பதவி என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அண்ணா சொன்ன "ஆட்டுக்குத் தாடியைப் போல, "நாட்டுக்குக் கவர்னர்" என்ற எண்ணத்தைத்தான் திமுக கொண்டிருக்கின்றது என்று ஸ்டாலின் பேரவையில் பேசினார்.

சட்டப்பேரவையில் இன்று ஸ்டாலின் பேசியதாவது:

ஒரே நாடு, ஒரே தேர்தல்; ஒரே நாடு, ஒரே "நீட்" தேர்வு; ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை; ஒரே நாடு, ஒரே மின்சாரக் கட்டமைப்பு; ஒரே நாடு, ஒரே கல்விமுறை; ஒரே நாடு, ஒரே மொழி; ஒரே நாடு, ஒரே மதம்; ஒரே நாடு, ஒரே மாதிரியான கலாச்சாரம், என்று, அனைத்து முனைகளையும் வலிந்து "மைய"ப் படுத்தும், எதிர்மறை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை, நாம் அனைவரும் தெளிவாக அறிந்து கொண்டிருக்கிறோம். 
இவற்றை மட்டும் அல்ல; அறம், அன்பு, அஹிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய உயர்ந்த பண்பு நெறிகளைக் கொண்ட " காந்தி தேசத்தில்", வெறுப்பு அரசியல் விரவிப் பரவுகிறது. முதன் முதலில், மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்தவர் அண்ணா அவர்கள். 
இதே பேரவையில், முதல்வராக இருந்த அண்ணா 27.6.1967 அன்று " மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக திராவிட நாடு கேட்டோம்; அதை விட்டுவிடவில்லை. மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக்கூடாது என்பதற்காகக் கேட்டோம், அதை விட்டுவிடவில்லை. 
மாநில சர்க்கார் பல அதிகாரங்களை, பல துறைகளிலும் பெறவேண்டும் என்பதற்காகக் கேட்டோம்; அதை நாங்கள் விட்டுவிடவில்லை. பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம்; அதை நாங்கள் விட்டுவிடவில்லை " என்று, ஒரே வீச்சில், மொழி - பண்பாடு ஆகியவற்றுக்கான பாதுகாப்பு, கூடுதல் அதிகாரங்கள், வேண்டும் வேண்டும்”  என்று வலியுறுத்தி அறிஞர் அண்ணா அவர்கள் கேட்டிருக்கின்றார். 
அது மட்டும் அல்ல.அதற்கு முன்பே 1963-ல் மாநிலங்கள் அவையில், "மாநிலங்கள், இலவசங்களைப் பெறும் மாநகராட்சிகளாக வேகமாக மாறி வருகின்றன " (The States are fast becoming dole-getting Corporations) என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்.
 மாநிலங்களின் அவல நிலைமையை எடுத்துக்காட்டி, மாநிலங்களுக்குத் தேவையான அதிக அதிகாரங்களைக் கொடுக்க வேண்டும் என்று வாதாடி – போராடியிருக்கின்றார்.
அதேபோல் தான், கலைஞர், இந்தியாவிலேயே முதன்முதலாக, மாநில - மத்திய உறவுகள் பற்றி ஆராய 1969-ல் ராஜமன்னார் குழு, 1974-ல் இதே பேரவையில் மாநில அவையில் சிறப்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் மாநில சுயாட்சி என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து இதே அவையில் நிறைவேற்றி சரித்திர சாதனை படைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். 
"உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்" என்று அறைக்கூவல் விடுத்தார். "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி " என்ற முழக்கத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, எதிரொலிக்கச் செய்தார்.  
தமிழகத்தில், அண்ணாவும், கருணாநிதியும் குரல்கொடுத்த மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கான அதிகாரங்கள், இன்று அது மதித்துப் போற்றப்படுகின்றனவா என்றால், இல்லை, மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன. 
கூட்டாட்சிக்கு எதிரான இந்த அணுகுமுறை, அதைப்பற்றி நான் சொல்லவேண்டும் என்று சொன்னால் இப்படிப்பட்ட நிலையில் நாம் ஆர்ப்பரித்து நிற்க வேண்டும், ஆனால் இன்றைக்கு ஆர்ப்பரித்து நிற்கவேண்டியவர்கள் என்ன செய்கின்றார்கள்? என்பது தான் கேள்விக் குறியாக இருக்கின்றது. 
ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒரு பதவி என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அண்ணா சொல்லியிருக்கின்றார். "ஆட்டுக்குத் தாடியைப் போல, நாட்டுக்குக் கவர்னர் " என்ற உணர்வை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார். அந்த எண்ணத்தைத்தான் திமுக இன்றைக்கும் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டிருக்கின்றது. 
 மராட்டிய கவர்னராக இருந்து, பதவி விலகிய விஜயலட்சுமி பண்டிட் , கவர்னர் பதவி என்பது, ஆடம்பரமான அலங்காரமான பொம்மைப் பதவியே தவிர, அதனால் எந்தப் பயனும் கிடையாது' என்று ஒருமுறை குறிப்பிட் டிருக்கிறார். அதேபோல் கவர்னராகப் பதவியில் இருந்த  ஸ்ரீபிரகாசா, 'இது சோர்வுள்ள, வேலை இல்லாத பதவி' என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இதே அவையில் பல நேரங்களில் இது குறித்து விவாதம் நடந்திருக்கின்றது. ஆளுநருக்கு பேரவைத் தலைவர் மூலமாக ஒட்டுமொத்தமாக இங்குள்ளவர்களின் கோரிக்கை என்னவென்று கேட்டால், பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரின்  விடுதலை அது எந்த நிலையில் இருக்கின்றது. அதற்கு ஒரு முடிவே இல்லாத ஒரு சூழ்நிலை தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. அது ஒரு கேள்விக்குறியாக இருந்துகொண்டிருக்கின்றது.
ஒரு நூறாண்டு ஆகிறது. 1919-ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியால் இயற்றப்பட்ட  " 1919-இந்திய அரசுச் சட்டம் " என்ற சட்டம்தான், முழுமையான சட்டமன்றங்கள் இந்தியாவில் அமையவும், அவற்றுக்குத் தேர்தல் மூலம், மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெறவும் வகைசெய்தது. அந்த சட்டத்தின்படி அமைந்தது தான், கண்ணியத்திற்குரிய இந்த சட்ட மன்றம். 
அந்த சட்ட மன்றத்திற்கு 1920ல் நடந்த பொதுத் தேர்தலில்,
மக்கள் நேரடியாக வாக்களித்து, நமக்கெல்லாம் மூல ஆதாரமான" நீதிக் கட்சி"யை ஆட்சியில் அமர்த்தினர் என்பது, நாமெல்லாம் மறக்கக் கூடாத மாபெரும் வரலாறு” இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x