தமிழகத்தில் நெல்லை, மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்பட பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் நெல்லை, மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்பட பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
Updated on
3 min read

தமிழகத்தில் இன்று (ஜூலை 20) அதிகாலை முதல் சென்னை, நெல்லை, மதுரை, தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களைக் குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையை ஒட்டி, கடந்த வாரம் சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் துபாயில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட 14 பேரையும் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாகப்பட்டினத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அந்த 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த 16 பேரும் கொடுத்த தகவலின்படி அவர்களின் வீடுகள் உள்ள சென்னை, நெல்லை, மதுரை, தேனி, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,

மேலப்பாளையத்தில் விசாரணை.. 

நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரது  வீட்டில் இன்று (சனிக்கிழமை) காலையில் கேரளாவில் இருந்து வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் 4 பேர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
இதனையொட்டி அந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உள்ளுர் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையைச்  சேர்ந்த அதிகாரி தலைமையில் 4 பேர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. காலை 6 மணி முதல் 9.15 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.

அப்போது அவரது வீடு அமைந்துள்ள வீதியில் உள்ள வீடுகளில் இருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை. தெருவிற்குள்ளும் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பின்னர், நெல்லை மேலப்பாளையத்தில் இப்ராஹிம் மனைவி செய்யது அலி பாத்திமா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் 1 மணி நேரம் சோதனை நடத்தினர்.

கீழக்கரையில் குவிந்த போலீஸார்..

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக டெல்லியில் கைது செய்யப்பட்டவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை ரபி அகமது, முண்டா நசீர், பைசல் ஷெரீப், முகைதீன் சீனி சாகுல் ஹமீது, வாலிநோக்கம் பாரூக் ஆகிய 5 பேரும் அடங்குவர்.

இந்நிலையில், தேசிய புலனாய்வு  முகமை அதிகாரிகள், ராமநாதபுரத்தில் முகாமிட்டு  ஐந்து பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய அரசால்  தடைசெய்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தோர் இருக்கிறார்களா? என்ற  கோணத்திலும்  விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். 

(ரபி அகமது வீடு)


இவர்கள் இன்று (ஜூலை 20) ராமநாதபுரம், வாலிநோக்கம், கீழக்கரை கிழக்குத் தெரு (ரபி அகமது வீட்டில் ) பகுதிகளில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பின்புலம் குறித்து  விசாரித்தனர். துபாய், சவூதி, சிங்கப்பூர்  உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புகளுக்கு  நிதியுதவி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உறவினர்களிடமும் விசாரணை தொடர்கிறது.  விசாரணை  தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது  பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

மதுரை நரிமேட்டில் 2-வது நாளாக விசாரணை..

மதுரை நரிமேட்டில் நேற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று (ஜூலை 20) 2-வது நாளாக நரிமேட்டில் உள்ள முகமது ஷேக் மொய்தீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

5 வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட முகமது ஷேக் மொய்தீன் என்பவரின் விட்டில்  நடைபெற்ற சோதனையில் ஆவணம் ஒன்று கிடைக்கவில்லை. இதனைக் குறிப்பிட்டு வீட்டிலிருந்தவர்களிடம் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

மேலும், மதுரையைச் சேர்ந்த மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது உறவினர் வீடுகள் தேனி மாவட்டம் கோம்பையில் உள்ளது. அதனால் கோம்பையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதிர்ந்துபோன கோம்பை கிராமவாசிகள்..

மதுரையைச் சேர்ந்த மீரான் கனி (38), முகமது அஜீஸ் (28) ஆகியோர் கடந்த 15-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்களின் பெற்றோர் தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்தவர்கள். எனவே தேசிய புலனாய்வு போலீஸார் இன்று அதிகாலை கோம்பையில் இவர்களது தந்தை முகமது கனியின் வீட்டிற்குச் சோதனையிட வந்தனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் சகோதரி பாத்திமா வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். டிஎஸ்பி.சீனிவாசராஜ் தலைமையில் பல மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர். தேசிய புலனாய்வு அமைப்பினர் இப்பகுதியில் சோதனையிட்டது கிராமப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென பெரும் போலீஸ் படை, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளைப் பார்த்த கிராமவாசிகள் அதிர்ந்துபோனதாகத் தெரிவித்தனர்.

- அசோக், ப.தனபால், என்.சன்னாசி, என்.கணேஷ்ராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in