

பட்ஜெட் தாக்கலின்போது சூட்கேஸை தவிர்த்தது ஏன் என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை கடந்த 5-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலின்போது அவர் வழக்கமாக இதற்கு முந்தைய நிதியமைச்சர்கள் ஆவணங்களை சூட்கேஸில் எடுத்துவருவதுபோல் எடுத்துவரவில்லை. மாறாக ஒரு சிவப்பு துணிக்குள் ஆவணங்களை வைத்து பரிசுப்பொருளைப் போல் கட்டி எடுத்துவந்தார். இது பரவலாக கவனம் ஈர்த்தது. கேள்விகளையும் எழுப்பியது.
இந்நிலையில், சூட்கேஸை தவிர்த்து புதிய முறையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுவந்தது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன், "சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சூட்கேஸ் என்பதற்கு மறைமுகமாக வேறு அர்த்தமும் இருக்கிறது. சூட்கேஸ் கொடுப்பது, சூட்கேஸ் வாங்குவது போன்ற லஞ்ச பழக்கவழக்கங்களை அது குறிப்பதாக இருக்கிறது. மோடி அவர்களின் அரசாங்கம் சூட்கேஸ் அரசாங்கம் அல்ல. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை" என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தித் திணிப்பு தொடர்பான கேள்விக்கு, "இந்தி திணிப்பெல்லாம் மோடி அரசு செய்யவில்லை. மாறாக ஷ்ரேஷ்டா பாரத் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் தமிழை வளர்க்கும் முயற்சியில் பாஜகவும் ஈடுபட்டு வருகிறது. இந்தி திணிப்பு என்பது உங்களுக்கு கிடைத்த தவறான தகவல். தபால் துறை தேர்வில் நடந்தது நிர்வாக ரீதியாக எழுந்த விவகாரம். அது திணிப்பாகாது. தற்போது தபால்துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன" என்றார்.
முன்னதாக கருத்தரங்கில் பேசிய நிர்மலா சீதாராமன், "கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையில் இந்தியர்களே மற்ற நாட்டவர்க்கு குருவாக இருப்பார்கள். தொழில் முனைவோரை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும்" என்றும் கூறினார்.