Published : 20 Jul 2019 10:13 am

Updated : 20 Jul 2019 10:14 am

 

Published : 20 Jul 2019 10:13 AM
Last Updated : 20 Jul 2019 10:14 AM

நோய் பரப்பும் பூச்சிகள்!- தடுப்பு முறைகளும்.. சுற்றுப்புற தூய்மையும்..

disease-spreading-insects

த.சத்தியசீலன்

பூச்சியை நசுக்குவது மாதிரி நசுக்கிவிடுவேன்!  நாம் யாரையாவதோ, நம்மை யாராவதோ நிச்சயம் இப்படி எச்சரித்திருப்பார்கள். ஒரு உவமைக்காக இப்படி சொன்னாலும், பூச்சிகளால்தான் பல்வேறு நோய்கள் பரவி, மக்களுக்கு மிகுந்த பாதிப்புகள் உண்டாகின்றன. எனவே, இனியாவது பூச்சிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார்  பாரதியார் பல்கலைக்கழக பதிவாளரும், விலங்கியல் துறைத் தலைவருமான கே.முருகன்.


பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும், கடைகளும் பெருகிவிட்டன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமின்றி, நோய் பரப்பும் கரப்பான் பூச்சி, ஈ, பேன், கொசு போன்ற தீமை விளைவிக்கும் பூச்சிகளும் பெருகி வருகின்றன. இவை காணப்படும் இடங்களை சுகாதாரச் சீர்கேட்டின் அறிகுறியாகக் கருதலாம். இவற்றைக் கட்டுப்படுத்தி, சுகாதாரச் சீர்கேடு இல்லாத,  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது குறித்து விளக்குகிறார் கே.முருகன்.

கரப்பான் பூச்சிகள்!

கரப்பான் பூச்சியில் 400 இனங்கள் உள்ளன. இவை எவ்வித தட்ப, வெப்ப சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை. பகல் நேரங்களில் மறைவாக இருந்து, இரவில் வெளிவந்து இரை தேடும் பூச்சியினம் இது. சுத்தம் செய்யப்படாத சமையலறை, குளியலறை மற்றும் கழிவறைகளில் இவை தென்படும். 

எல்லா பொருட்களையும் உண்ணும் இதன் உணவு முறையை  ‘ஆம்னி வோரஸ்’ என்று குறிப்பிடுவர். வீடுகளில் தொட்டிகளை மூடிவைக்காவிட்டால் அவற்றில் முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யத்  தொடங்கி விடும்.  எனவே, வீட்டின்  சுற்றுப்புற  பகுதி, கழிவறை, குளியலறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.மேலும், கரப்பான்பூச்சிகள் உணவுபொருட்களை மொய்த்து, அசுத்தம் செய்வதுடன், அவற்றின் மேல் முட்டையிடும்.  

பெண் கரப்பான் பூச்சிகள் உணவுப் பொருளின் மீது முட்டை யிட்டுச் செல்வதால், அதன் மீது பூஞ்சை வளர்ந்து, மனிதர்களுக்கு தொற்றுநோய்களைப் பரப்புகின்றன. 

எனவே, உணவுப் பொருட்களை நன்றாக மூடிவைக்க வேண்டும்.

வெளிச்சம் படாத, மறைவான இடங்களில் இவை ஒளிந்து கொள்ளும். சுவரின் இடுக்குகள், வெடிப்புகள், சிறு துளைகளில் மறைந்து,
இனப்பெருக்கம் செய்யும். எனவே, அவற்றை அடைத்துவிட வேண்டும். கரப்பான்பூச்சிகளைக் கொல்லும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பல இருந்தாலும், இயற்கை முறையில் கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து, கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால், கரப்பான் பூச்சிகள் முழுமையாக அழிந்துவிடும்.

தொல்லை தரும் ஈக்கள்!

பொதுவாக ஈக்கள் மனித உணவுப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் உட்கொள் கின்றன. சாக்கடைகள், குளம்,  குட்டைகள், உணவுப் பொருட்கள், ஆடு, கோழி, மீன்  இறைச்சிக் கழிவுகள் இருக்கும் இடங்களில் ஈக்கள் அதிகம் காணப்படும்.  ஈக்களால் மனிதர்களுக்கு 65 வகையான நோய்கள் பரவுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை மனிதர்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களின் மீது கழிவுகளையும், முட்டைகளையும் இடுவதால், அவற்றை  சாப்பிடுவோருக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, உணவுப் பொருட்களை பாதுகாப்பாக மூடிவைத்து, அவற்றின்  மீது ஈக்கள் அமர்வதை தடுக்க வேண்டும்.  மேலும், இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளின் மூலை முடுக்குகளில் கற்பூரத்தை வைத்தால், ஈக்கள் நெருங்காது. 

மூட்டைப்பூச்சி!

வீடுகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் திரையரங்குகள், இருக்கைகளில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும். சுகாதாரம் குறைவாக இருக்கும் இடங்களில் மூட்டைப்பூச்சிகள் பெருகத் தொடங்கும். குறிப்பாக,  குளிர் பிரதேசங்கள், குளிர்ச்சியான இடங்களில் இவை அதிகம் காணப்படும். மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவை  மூட்டைப் பூச்சிகள். இவை கடிப்பதால் மனிதர்களுக்கு பல்வறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
மூட்டைப் பூச்சிகளின் கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை சுவாசிப்பதால், சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

லாவண்டர், ரோஸ்மேரி மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் வாங்கி ஒவ்வொன்றிலும், 3 துளிகள் எடுத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றித் தெளிப்பதன் மூலம் மூட்டைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

இதேபோல, சிலந்திகள் காணப்படும் இடங்களில் பெப்பர்மின்ட் ஆயிலை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். எறும்புகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வினிகரையும், கொசுக்களுக்கு பூண்டை நசுக்கி தண்ணீரில் கலந்தும் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பொதுவாக வீடுகளில் காணப்படும் பல்லிகள், மற்ற பூச்சிகளை உண்டு அழிப்பவை என்றாலும், பெரும்பாலானோர் பல்லிகளை விரும்புவதில்லை. இது வீட்டுக்குத்  தேவையில்லாத உயிரினம். இவற்றைக்  கட்டுப்படுத்த காபி தூளை, மூக்குப்பொடியுடன் கலந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி,  பல்லிகள் நடமாடும் இடங்களில் வைக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து, மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வெங்காயத்தை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி,  ஆங்காங்கே போட்டு வைப்பதால், அதிலிருந்து வெளிவரும் மணத்தால் பல்லிகள் வெளியேறிவிடும். பொதுவாகவே, நமது இருப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம், பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்” என்றார்  கே.முருகன்.

நோய் பரப்பும் பூச்சிகள்

You May Like

More From This Category

More From this Author