Published : 19 Jul 2019 01:03 PM
Last Updated : 19 Jul 2019 01:03 PM

உயிர் போகும் வரை திமுகவில் தான் இருப்பேன்: துரைமுருகன்

வேலூர்

உயிர் போகும் வரை திமுகவில் தான் இருப்பேன் என, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று (வியாழக்கிழமை) வேலூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார். அப்போது, தனது வீட்டுத் தோட்டத்தில் பணத்தை வைத்தது யார் என்று தமக்கு தெரியும் என்றூம், மகன் மீது லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றது யார் என்று தெரியும் என்றும் துரைமுருகன் பேசினார். இந்த துரோகத்தை செய்தவர்கள் யார் என்று தெரியும் என பேசிய துரைமுருகன் கண்கலங்கினார். என்ன நேர்ந்தாலும் திமுகவில் தான் இருப்பேன் என, துரைமுருகன்உறுதிபட தெரிவித்தார். துரோகம் செய்துவிட்டு பணத்தை நாங்கள் பதுக்கி வைத்தோம் என்று கூறுவதாகவும், உயிர் போகும் வரை திமுகவில் தான் இருப்பேன் என துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x