Published : 19 Jul 2019 12:13 PM
Last Updated : 19 Jul 2019 12:20 PM
திமுகவை போல், சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு பாதபூஜை செய்து பதவி வாங்கவில்லை என, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் எப்போதும் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம். என்னை முரசொலியில் திமுக விமர்சிக்கிறது. திமுகவைப் போல், டெல்லிக்கு, சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு பாதபூஜை செய்து பதவி வாங்கவில்லை", என தெரிவித்தார்.
இதையடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்குப் பின் மாநில அரசு-மத்திய அரசு உறவாக தொடர்வதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது கட்சி தான். நானோ, அவரோ இல்லை." என தெரிவித்தார்.
இதன்பின், பயோமெட்ரிக் கருவிகளில் இந்தி உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்", என தெரிவித்தார்.