Published : 19 Jul 2019 11:19 AM
Last Updated : 19 Jul 2019 11:19 AM

அன்பாசிரியர் 42: சங்கரதேவி- அரசுத் தொடக்கப் பள்ளியை வண்ணக் கலைக்கூடமாக மாற்றிய வித்தகர்!

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

ஒரு புத்தகம், ஓர் எழுதுகோல், ஒரு குழந்தை மற்றும் ஓர் ஆசிரியரால் இந்த உலகத்தையே மாற்றிவிடமுடியும்!

இளம்சிவப்பு, கருநீலம், அடர் பச்சை, கடல் நீலம் என வண்ணங்கள் மிளிர்கின்றன. குழந்தைகள் ஆடிப் பாடுகிறார்கள்; விளையாடுகிறார்கள். சிங்கம் சிரிக்கிறது; குரங்கு குதூகலிக்கிறது. மீன்கள் நீந்துகின்றன. மரங்கள் அனைத்துக்கும் சாட்சியாய் நிற்கின்றன. நவீனத் தரத்தோடு புதுப் பொலிவுடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது புதுச்சேரியில் உள்ள அபிஷேகப்பாக்கம் அரசுத் தொடக்கப் பள்ளி.

அரசுப் பள்ளி சுவர்களின் அசாத்திய மாற்றம் குறித்தும் தனது ஆசிரியப் பயணம் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் அன்பாசிரியர் சங்கரதேவி. ''சின்ன வயதில் ஜிப்மரில் படித்து மருத்துவர் ஆக ஆசைப்பட்டேன். 93% மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஆசையாக ஆசிரியர் பணி இருந்தது. அரசுக் கல்லூரியில் பொறியியலுக்கு இடம் கிடைத்தபோதும் ஆசிரியப் பணியையே தேர்வு செய்தேன்.

2008-ல் காரைக்கால் கோவிந்தசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. நான் மிகவும் ஜூனியர் என்பதால் ஆரம்பத்தில் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவது சிரமமாக இருந்தது. மெல்ல மெல்ல மாணவர்களின் உலகத்துக்குள் பயணப்பட்டேன். சுனாமியால் தாய், தந்தை, சகோதர உறவுகளை இழந்த குழந்தைகள் அப்போது படித்தனர். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவேன். காரைக்கால் தமிழில் கற்பிப்பதற்காக நிறையப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். மாணவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.

அடுத்ததாக ஆதிங்கப்பட்டு பள்ளிக்கு மாற்றலாகி, 2016 பிப்ரவரியில் அபிஷேகப்பாக்கம் பள்ளிக்கு வந்தேன். நாங்கள் ஒன்றாக 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றலானோம். இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட குழந்தைகள்தான் அதிகம் இருந்தனர். விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர்களுக்கு அடிக்கடி கீழே விழுந்து அடிபடும். பயங்கரமாக சத்தம் போடுபவர்களாக, மீத்திறன் கொண்டவர்களாக மாணவர்கள் இருந்தனர். அப்போது அவர்களுக்குக் கதை வாசிப்பது, வண்ணம் தீட்டுவது, கைவினைக் கலைகள் உள்ளிட்ட பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பித்தோம்.

பள்ளி முதல் நாள் கொண்டாட்டங்கள் | அபிஷேகப்பாக்கம்

இதனால் மாணவர்கள் ஒழுங்குடன் இருக்க ஆரம்பித்தனர். அடுத்த மாதமே ஆண்டு விழாவை நடத்தினோம். பொம்மலாட்டம், வில்லுப் பாட்டு உள்ளிட்ட கிராமியக் கலைகள் மூலமாக டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாரதியார் பாடல்கள் பாடப்பட்டன. ஆனால் பொழுதுபோக்குகள் இல்லாத அந்த ஆண்டுவிழாவை மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பவில்லை.

அதிகரித்த மாணவர் சேர்க்கை

அவர்களின் மனநிலையைப் புரிந்து அடுத்த ஆண்டில் கரகாட்டம், தப்பாட்டம், பேச்சு, நடனம், கவிதை என மாற்றம் செய்தோம். மக்களுக்கும் பிடிக்க ஆரம்பித்து, பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகரித்தது'' என்கிறார் அன்பாசிரியர் சங்கரதேவி.

புத்தகக் கற்பித்தல் முறைகளை முழுவதும் செயல்வழிக் கற்றலாக மாற்றியுள்ள இவர், அதில் தான் பின்பற்றும் வழிமுறைகள் குறித்தும் சுவாரஸ்யமாக விளக்குகிறார். ''பொதுவாகப் பாடப் புத்தகத்தில் ஒரு பாடம், பாடல் என்று மாறி மாறி வரும். உதாரணத்துக்கு பாடலில் வரும் பலூன்காரர் பற்றி எடுத்துக்கொள்ளலாம். அதில் வரும் புகைப்படங்களை ப்ரிண்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். பலூன்காரர் போலவும், அவர் ஒரு சந்தையில் நிற்பது போலவும் மாணவர்களே நடிப்பர். பாடலில் பார்க்கும் வார்த்தைகளை அவர்கள் எழுத வேண்டும். பறவை, புல்வெளி, பலூன்காரர் என அதில் வரும் வார்த்தைகளைத் தொகுப்பர். அவற்றை இணைத்து வாக்கியங்கள் உருவாக்கப்படும். அதைக் கொண்டு கதையை உருவாக்குவோம்.

கதைப் புத்தகங்கள் பரிசு

இதைச் சிறப்பாகச் செய்யும் மாணவர்களுக்குக் கதைப் புத்தகங்களைப் பரிசாக வழங்குவேன். வெள்ளை நிறக் காகிதங்கள் மாணவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால் வண்ணக் காகிதங்களைக் கொடுப்பேன். இதை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று, கற்பனையாகக் கதை எழுதி வரவேண்டும். முதலில் பென்சிலால் எழுதச்சொல்லி, தவறுகள் இருந்தால் திருத்துவேன். பின்னர் பேனாவால் எழுதிக்கொள்ளலாம். அதுவே அவர்களின் சொந்தக் கதைப்புத்தகமாக மாறிவிடும். பாதிப் புத்தகங்களை அறக்கட்டளைகள் மூலமும் மீதியைச் சொந்த செலவிலும் வாங்கிவிடுவேன்.

கணக்குப் போடும்போது, கேள்விகளில் இருக்கும் பொருட்களை நிஜத்தில் கொண்டுவந்து மாணவர்களிடையே பிரித்துக் கொடுப்பேன். சூழல் அறிவியல் பாடத்தில் செடிகளை வளர்த்துப் பாடம் சொல்லிக் கொடுப்போம். வயல்வெளிக்குச் சென்று பறவைகளைப் பார்ப்போம். கடந்த ஆண்டில் தனியார் அமைப்பின் உதவியுடன் நாங்களே விதைப்பந்து தயார் செய்தோம். மாணவர்கள் பேரணியாகச் சென்று குளம், நீர் நிலைகளில் அவற்றை விதைத்து வந்தனர். அவை இப்போது துளிர்விட்டு வளர்ந்திருக்கின்றன. அதேபோல மாணவர்கள் தினந்தோறும் போடும் பேப்பர் குப்பைகளை வீணாக்காமல் சேகரித்தோம். அவற்றைச் சிறியதாகக் கிழித்து, கூழ் போல அரைத்து, பேப்பர்களாக உருவாக்கினோம். அரசு நடத்திய அறிவியல் கண்காட்சியில் சிறந்த கழிவு மேலாண்மை என்று மண்டல அளவில் அந்த செயல்திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மெல்லக் கற்போருக்குச் சிறப்பு வகுப்புகள்
இங்குள்ள மாணவர்களில் சுமார் 10% பேர் மெல்லக் கற்போர் வகையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தனி வகுப்புகளை எடுக்கிறோம். மதிய உணவு இடைவேளை மற்றும் மாலையில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் மாணவர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிரித்துவிடுவோம். நன்றாகப் படிப்பவர்களைத் தனிக் குழுவாக அமைத்து அவர்களுக்கு ஆக்டிவிட்டிகளைக் கொடுக்கிறோம். மெல்லக் கற்பவர்கள் படிப்பது, எழுதுவது தவிர ஓவியம், பாடுவது, நடிப்பது உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்குவர். அவர்களுக்கு என்ன வருகிறதோ அதைச் சொல்லிக் கொடுக்கிறோம். அவற்றுக்குப் பரிசும் அளிக்கிறோம். இதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், படிப்பது, எழுதுவதிலும் அவர்களிடம் முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் சங்கரதேவி.

பள்ளியின் சுவர்களை கண்களைப் பறிக்கும் வகையில் கலைக்கூடமாக மாற்றியது பற்றியும் ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார். ''கடந்த ஆண்டில், வார இறுதி நாட்களில் அரசுப் பள்ளிகளுக்கு ஓவியம் தீட்டத் தன்னார்வலராகச் சென்றேன். அப்போது நமது பள்ளியிலும் இதைச் செய்யலாமே என்று தோன்றியது. தன்னார்வலர்கள் ஓவியம் தீட்டித்தரத் தயாராக இருந்தாலும், அவர்களுக்கான உணவு, போக்குவரத்துச் செலவு, பெயிண்டிங் ஆகியவற்றுக்குப் பணம் தேவைப்பட்டது.

பெரிய சுற்றுச்சுவர், 2 மாடிகள், 12 வகுப்பறைகள் என பட்ஜெட் பெரிதாக இருந்ததால், நன்கொடை கொடுக்கப் பலரும் தயங்கினர். சரி நாமே தொடங்குவோம் என்று முடிவெடுத்தேன். அக்கா ரூ.5 ஆயிரம் கொடுத்தார். நான் ரூ.40 ஆயிரம் செலவு செய்தேன். சக ஆசிரியையும் தோழியுமான நித்யா உறுதுணையாக இருந்தார். உமாபதி, ரவி என்னும் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் சின்மயா என்னும் வடிவமைப்பாளரும் சேர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றினர்.

வார இறுதி நாட்களில் பெயிண்டிங் பணி துரிதமாக நடந்தது. மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போட்டு மேற்கொள்ளப்பட்ட பெயிண்டிங் வேலை கடந்த மே மாத இறுதியில் முடிந்தது. உயர் தரத்தில் பள்ளியின் சுவர்கள் பளிச்சிடுவதைப் பார்த்த எல்லோரும் பாராட்டினர். யாருக்காகவும் காத்திருக்காமல் கைக்காசு போட்டுப் பணியாற்றியதால் இப்போது நிறையப் பேர் உதவ முன்வருகின்றனர்.

இதே ஊரைச் சேர்ந்த வெங்கட் ராயலு என்பவர் பள்ளி முழுக்க ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். யாவரும் கேளிர் என்னும் இயக்கத்தினர் ஸ்டேஷனரி பொருட்கள், நூலகத்துக்கான புத்தகங்கள் அளித்துள்ளனர். அருகிலுள்ள நிறுவனம் மாணவர்களுக்கு அகராதிகளை வழங்கியுள்ளது.

மறக்க முடியாத பாராட்டு
குழந்தைகளின் 'செம்மயா இருக்கு மிஸ்!' என்ற குரல்களைத்தான் ஆகச்சிறந்த பாராட்டாக நினைக்கிறேன். அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் முத்தங்கள், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிக்கு வந்து பெயிண்டிங்கைப் பார்த்தபோது அடைந்த குதூகலம் ஆகியவற்றை என் வாழ்நாளில் மறக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பதையும் எனக்கான அங்கீகாரமாக நினைக்கிறேன். தலைமை ஆசிரியை குணா எப்போதுமே எங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பார். சிரித்த முகத்தோடு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார். எதற்கும் நோ சொல்லவே மாட்டார். எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுவதுதான் என்னுடைய பலம், அதேதான் என்னுடைய பலவீனமும்.

எதிர்பார்ப்புகள் என்னென்ன?
அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சுதந்திரம் மற்ற பள்ளிகளில் கிடைக்காது. பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் பெற்றோர் அங்கு கை கட்டித்தான் நிற்கவேண்டி இருக்கிறது. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல ஆசிரியர்களும் பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவேண்டும். பள்ளியின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, டைரி, ஷூ, நவீன சீருடை ஆகியவற்றை எதிர்பார்ப்பது பெற்றோரின் விருப்பமாக இருக்கிறது. 'என் பையன் நல்லா இங்கிலீஷ் பேசணும் டீச்சர்!' என்றுகூட ஒரு பெற்றோர் கேட்டிருக்கிறார். பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை அரசுப் பள்ளியும் அதன் ஆசிரியரும் நிறைவேற்ற வேண்டும். அது சரியாக நடக்காததால்தான் அரசுப் பள்ளிக்கான வரவேற்பு குறைந்துகொண்டே செல்கிறது.

மாணவர்கள் உட்கார்ந்து படிக்க, 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய மேசை, நாற்காலிகளைத்தான் இன்னும் பயன்படுத்துகிறோம். அவற்றைப் புதிதாக வாங்க வேண்டியது அவசியம். பழைய கட்டிடம் ஒன்று பயன்படாத நிலையில் உள்ளது. அதை இடித்துவிட்டு, அங்கே விளையாட்டு மைதானத்தையும் தோட்டத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் நிதி தேவைப்படுகிறது'' என்று கேட்கிறார் அன்பாசிரியர் சங்கரதேவி.

முந்தையை அத்தியாயம்: அன்பாசிரியர் 41: கனகசபை- அரசுப் பள்ளியை பசுமைத் தோட்டமாக மாற்றிய இயற்கை ஆர்வலர்!


அன்பாசிரியர் சங்கரதேவி, தொலைபேசி எண்- 9786904532

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x