

நாகப்பட்டினம்
மயிலாடுதுறையை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. கும்பகோணம் மாவட்டம் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் தனி மாவட்டம் கோரிக்கையை வலியுறுத்தி பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கச் செயலாளரும், சமூக ஆர்வலருமான அப்பர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான, மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆட்சியாளர்களால் மயிலாடுதுறை தொடர்ந்து புறக் கணிக்கப்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கும் வரை அனைத்துத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், பொதுமக்கள் ஆதரவுடன் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதில், பாஜக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இன்று கடையடைப்பு போராட்டம்
தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறையில் வணிகர் சங்கம், சேவை சங்கங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில் உள்ளிட்ட மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இன்று(ஜூலை 19) கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.