

கடைக்குப் போய் பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்துவருகிறது. இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதையே விரும்புகின்றனர்.
இதனால், ஆன்லைன் விற்பனை மையங்களான அமேசான், பிளிப்கார்ட், ஷாப்க்ளூஸ் போன்றவை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியல் தெரிவிக்கிறது. இதனால், சர்வதேச அளவில் ஆன்லைன் விற்பனை மையங்கள் உருவாகி வருகின்றன.
செல்போன் மூலம் மட்டுமே 70 சதவீத ஆன்லைன் ஆர்டர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் வழியான வணிகம் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 31 சதவீதம் உயர்ந்து, 32.7 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வணிகத்தை மேன்படுத்த தங்களுக்கான ஒரு பிரத்யேக ஆன்லைன் வியாபாரத்தை நிறுவ இயலாத தனி நபர்கள் மற்றும் சிறு நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு உதவும் வகையில், ஐந்தே நிமிடங்களில் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கும் செல்போன் செயலியைக் கண்டுபிடித்துள்ளார் கோவையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீவத்சன் கிருஷ்ணமூர்த்தி.
தகவல் தொழில்நுட்ப செலவு இல்லாமல், மற்ற பெரிய வெப்சைட்டுகளின் சந்தைபோல வணிக கமிஷன் இல்லாமல், இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடைய உதவுகிறது இவர் கண்டுபிடித்துள்ள செல்போன் செயலி டியூநௌ (duNow).
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வத்சன் கூறும்போது, “ஆடை அலங்கார நகை வணிகர்கள், ஃபேஷன் டிசைனர்கள், நெசவாளர்கள், மொத்த வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும், மொபைல் மூலம் பாதுகாப்பான முறையில் வணிகத்தை மேம்படுத்த இது உதவும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அதன் மூலம் ஐந்தே நிமிடங்களுக்குள் ஆன்லைன் ஸ்டோர் உருவாக்கிக் கொள்ளலாம்.
ஒரு வணிக நிறுவனத்துக்கு அத்தியாவசியமான லோகோ, விற்பனைப் பொருட்களுக்கான காட்சி அமைப்பு, விற்பனை மற்றும் கொள்முதல் அட்டவணை, சரக்கு மேலாண்மை அமைப்பு, தானியங்கி முன்பதிவு விசாரணை, மொத்த விற்பனை வசதி, பாதுகாப்பான கட்டண பரிவர்த்தனை இணைப்பு, டிஜிட்டல் ரசீது, வாடிக்கையாளர்களின் கருத்து அறிவதற்கான நேரடி தகவல் தொடர்பு என பல வசதிகளை இந்த செயலி உள்ளடக்கியுள்ளது.
பதிவிறக்கம் செய்த பிறகு, தொழில்முனைவோர் இந்த செயலியின் அனைத்து அம்சங்களையும் இலவசமாக 30 நாட்கள் வரை உபயோகித்துக் கொள்ளலாம். அதன்பிறகு, வியாபார நிறுவனங்கள் தங்களுக்கேற்ற இலவச வாழ்நாள் அடிப்படைத் திட்டம் அல்லது நாளொன்றுக்கு ரூ.20 என்ற பிரீமியத் திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்தியாவில் ஆன்லைன் ஆடைச் சந்தை சில்லறை விற்பனை வாய்ப்புகள் அதிகரித்தாலும், அதைச் சார்ந்த சவால்களும், சிக்கல்களும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. பல்வேறு காரணங்களால் இணையத் தொழில்நுட்பத்தை செயல்படுத்த இயலாத சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள், வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகத்தின் வாய்ப்புகளை முழுமையாக அனுபவிக்க இந்த செயலி உதவும். கூடுதல் விவரங்களுக்கு https://dunow.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்” என்றார்.