

ஆர்.கிருஷ்ணகுமார்
வழக்கமாக புத்தகங்களில்தான் கதை இருக்கும். ஆனால், கோவையில் ஒருவர் வைத்திருக்கும் புத்தகத்துக்கே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஏறத்தாழ 120 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகத்தை, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த கே.கிருஷ்ணகோபால்.
`இன்றைய செய்தி, நாளைய வரலாறு’ என்பார்கள். இன்றைய செய்தியையும், தகவலையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு வரலாறாக வழங்குபவை புத்தகங்கள்தான். காலப்பெட்டகமான புத்தகங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டியது நம் கடமை. `துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். புத்தகங்கள் வரலாற்றை அறிய உதவுவதுடன், சில நூல்கள் வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளன. அறிவுசார் சொத்துகளான புத்தகங்களைப் பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது.
இலங்கையில் இனப் பிரச்சினையின்போது, 1981-ல் யாழ்ப்பாணம் பொது நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நூல் அழிப்புகளில் இது மிகப் பெரியதாக கருதப்படுகிறது. ஏறத்தாழ 97,000 அரிய நூல்களுடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்த இந்த நூலகம் எரிக்கப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் அழியாத காயத்தை ஏற்படுத்தியது.
ஓலைச் சுவடிகளில் இருந்த இலக்கியங்களும், பாடல்களும் புத்தக வடிவாக்கப்பட்டதால்தான், செம்மொழியாம் தமிழின் சுவையை நம்மால் தற்போது உணர முடிகிறது. தம் வாழ் நாளெல்லாம் ஓலைச் சுவடிகளைத் தேடி, புத்தகங்களாக்கிய பெருமக்கள் தமிழில் பலருண்டு. அதேபோல, அரிய புத்தகங்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்பவர்களும் உண்டு. புத்தகங்களின் மூலமாகத்தான் நமது வழிவழிப் பெருமையை, தொன்மையை, வரலாற்றை, வாழ்க்கை முறையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை அறிந்துகொள்ள முடிகிறது. அரிய புத்தகங்களைத் தேடிப்பிடித்து, மற்றவர்கள் அறிந்துகொள்ளச் செய்தவர்களும் உண்டு.
தொலைந்துபோன புத்தகம்?
அந்த வகையில், கோவையில் தொலைந்துபோன ஒரு அரிய புத்தகம், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதை கண்டுபிடித்து, மீட்டுக் கொண்டு வந்துள்ளார் கோவையைச் சேர்ந்த கே.கிருஷ்ணகோபால்(65). கோவையில் விளம்பர நிறுவனம், ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் இவர், கோவை விளம்பர சங்கத்தில் நிறுவனச் செயலர், உலக தெலுங்கு சம்மேளனத் துணைத் தலைவர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட, சேலம் பகடால நரசிம்மலு நாயுடு எழுதிய நூலைத்தான் இவர் மீட்டுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகோபாலிடம் பேசினோம்.
நரசிம்மலு நாயுடுவின் சரித்திரம்!
“சேலத்தில் 1854-ல் அரங்கசாமி நாயுடு-லட்சுமி அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் சேலம் பகடால நரசிம்மலு நாயுடு. இவரது தாத்தா சேலத்தில் உயர்பதவியில் இருந்துள்ளார். விஜயநகர சாம்ராஜ்ய போர்ப்படையில் இவர்களது முன்னோர் உயரதிகாரிகளாக இருந்துள்ளனர். சேலம் கலைக் கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்ற நரசிம்மலு நாயுடு, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். படிக்கும் பருவத்திலேயே `யாப்பிலக்கண வினா-விடை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் பயணம் செய்து, பல சுவடிகளையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு சேலத்திலிருந்து கோவைக்கு குடிபெயர்ந்துள்ளார்.
தேச வரலாறு, இந்து சமய தத்துவம், சமயத் தலைவர்கள் வரலாறு, இறை பக்தி, ஆன்ம இலக்கணம், வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆர்ய சத்ய வேதம், ஆர்ய திவ்ய தேச யாத்ரா சரித்திரம், தட்சண இந்திய சரித்திரம், பலிஜவாரு புராணம், தல வரலாறுகள், ஆரிய தர்மம் உள்ளிட்ட நூல்களை தமிழ், தெலுங்கு மொழிகளில் எழுதியுள்ளார். சொந்தமாக பதிப்பகங்களை நிறுவி, புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மேலும், சுதேசாபிமானி, கோவை அபிமானி, கோவை கலாநிதி பத்திரிகைகளை நடத்தியுள்ளார்.
கோவை தொழிலதிபர்!
கோவையின் ஆரம்பகால தொழில் துறையைக் கட்டமைத்தவர்களில் இவரும் ஒருவர். கோவையின் முதல் நூற்பாலை அமைக்க, தனது நிலத்தின் ஒரு பகுதியைத் தந்துள்ளார். விக்டோரியா மகாராணியின் பொன்விழாவையொட்டி, தற்போது கோவை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் `விக்டோரியா மண்டபம்’ கட்டுவதில் பங்காற்றியுள்ளார். ஆங்கில அரசு இவரது பொதுப்பணியைப் பாராட்டி `ராவ்பகதூர்’ பட்டம் அளிக்க முன்வந்தபோதும், அதை மறுத்துள்ளார்.
பலிஜவாரு புராணம்!
1900-ல் பலிஜவாரு புராணம் (அ) நாயுடு சமஸ்தான சரித்திரம் என்ற நூலை இவர் எழுதி, வெளியிட்டுள்ளார். 1905-ம் ஆண்டு இந்த நூல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் புராணம், இதிகாசம், கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட அரசர்களின் வரலாறு, முஸ்லிம் அரசர்கள், மதுரை சமஸ்தானங்கள், ஆந்திராவில் இருந்து தெலுங்கர்கள் வெளியேறிய வரலாறு, சென்னப்பட்டின வரலாறு, கோவை நகர் குறித்த பல தகவல்கள், ஒப்பணக்கார வீதி என்ற பெயர் ஏற்படக் காரணம், விக்டோரியா மண்டபம் என பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை `தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பாராட்டி எழுதியுள்ளார். இவர் தனது பெருமளவு சொத்தை தர்ம காரியங்களுக்கு எழுதிக்கொடுத்துள்ளார். இவரது பெயரில் செயல்படும் எஸ்.பி.என். அறக்கட்டளை பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் ஒரு நூலகமும் செயல்படுகிறது. அங்கு சென்றபோதுதான், நரசிம்மலு நாயுடு பலிஜவாரு புராணம் என்ற நூலை எழுதியிருப்பதும், அது தற்போது கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்தது.
பிரிட்டிஷ் நூலகத்தில்...
ஆந்திராவைச் சேர்ந்த ஆய்வாளர் ராயுடு செல்லப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இந்த புத்தகம் இருப்பது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களைத் தொடர்புகொண்டபோது, 1900-ல் வெளியான புத்தகத்தின் மூலப் பிரதியும், 1905-ல் வெளியான மறுபதிப்பும் இருப்பதாக தெரிவித்தனர். எனினும், மூலப் பிரதியை கையாள முடியாது என்றும், ரூ.20 ஆயிரம் செலுத்தினால் மறுபதிப்பு பக்கங்களை ஸ்கேன் செய்து, சிடி-யில் காபி செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பினோம். 2014 ஜூலை மாதம் சிடி-யை அனுப்பிவைத்தனர். அதிலிருந்த பக்கங்களை பிரிண்ட் செய்து, நகல் எடுத்து, புத்தகமாக மாற்றி வைத்துக்கொண்டோம். ஒரு புத்தகத்தை எஸ்பிஎன் நூலகத்துக்கும் வழங்கினேன். இதுதான் இந்தப் புத்தகத்தின் கதை” என்றார் கிருஷ்ணகோபால்.