Published : 19 Jul 2019 08:41 AM
Last Updated : 19 Jul 2019 08:41 AM

கூடைப்பந்தில் கலக்கும்  கோவை மாணவிகள்!

த.சத்தியசீலன்

கூடைப்பந்து ஆட்டத்தில் மாவட்ட போட்டிகள் முதல் தேசியப் போட்டிகள் வரை முத்திரை பதித்து வருகின்றனர் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள். கோவை மாவட்டத்தில் பிரபலமடைந்து வரும் விளையாட்டுகளில் கூடைப்பந்து ஆட்டமும் ஒன்று. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கூடைப்பந்துக் கழகங்கள் மூலம், கல்வி நிலையங்கள் மற்றும் கிளப்புகளுக்கு இடையில் தொடர்ச்சியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும்  மாணவிகள் கி.சத்யா, அ.நித்திகா, ச.காவ்யா ஆகியோர், மாவட்ட, மாநில, தேசிய  அளவிலான போட்டிகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.
2017-18-ல் இந்திய பள்ளிகள்  விளையாட்டுக்  குழுமம் நடத்திய கூடைப்பந்து போட்டியில்,  தமிழக அணியில் இடம் பெற்ற இந்த மாணவிகள், தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இவர்களுக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி, ரூ.1.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார். பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவிகளைச் சந்தித்தோம்.

இளம் வயதிலேயே 8 முறை தேசிய அளவில் தமிழக அணிக்காக விளையாடி, ஒரு தங்கம், மூன்று வெள்ளி  மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் வென்ற மாணவி கி.சத்யா கூறும்போது, “பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி-ஜெயசுதா. சகோதரிகள் பிரியா, காவ்யா ஆகியோரும் கூடைப்பந்து வீராங்கனைகள். சகோதரி பிரியா தமிழ்நாடு அணிக்காக  விளையாடி, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். சிறு வயது முதலே நானும் கூடைப்பந்து விளையாடி வருகிறேன். ஆறும் வகுப்பு படிக்கும்போது கோவை மாவட்ட அணிக்குத் தேர்வாகி,  கோவை மாவட்ட மற்றும் தமிழ்நாடு அணிகளுக்காக விளையாடினேன். 
மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டிகளில், நான் இடம்பெற்றிருந்த கோவை மாவட்ட அணி 3 முறை தொடர் வெற்றிகளைக் குவித்தது. கூடைப்பந்தில்  ‘ஷூட்டர் கார்டு’-ஆக நான் விளையாடி வருகிறேன். 8-ம் வகுப்பு படிக்கும்போது தமிழ்நாடு சப்-ஜூனியர் அணியின் கேப்டனாக செயல்பட்டு, அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது தலைமையிலான தமிழக அணி,  ராஜஸ்தானில் நடைபெற்ற தேசியப் போட்டி யில் பங்கேற்று, பல ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற, பலம்வாய்ந்த சத்தீஸ்கர் மாநில  அணியை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் நான் மட்டும் 43 புள்ளிகள் எடுத்தேன். பதினைந்து ஆண்டுகளாக சப்-ஜூனியர் பிரிவில் தமிழக அணியால் பெற முடியாத வெற்றியை, எங்கள் பயிற்சியாளர் முருகேசன் துணையுடன் சாத்தியமாக்கினோம்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற, கேலோ இந்தியா போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றோம். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நடைபெற்ற, இளையோருக்கான தேசிய கூடைப்பந்துப் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி,  வெள்ளிப் பதக்கம் வென்றோம்.  இப்போட்டியில் ‘சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் விருது’  விருது எனக்கு கிடைத்தது. 

இந்த இரண்டு தேசியப் போட்டிகளிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரகுகுமார் எங்களை திறமையாக வழிநடத்தினார்” என்றார்.

மாணவி அ.நித்திகா கூறும்போது, “தந்தை பி.அமுதன், தனியார் நிறுவன ஊழியர். அம்மா அ.சுதா. முன்றாம் வகுப்பு முதல் கூடைப்பந்து விளையாடி வருகிறேன். பள்ளி அணியில் விளையாடி வந்த நான், 7-ம் வகுப்பு படிக்கும் போது மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் கோவை அணிக்காக ‘பால் ஹேண்ட்லர்’-ஆக விளையாடினேன். அதில், கோவை அணி முதலிடம் வென்றது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநிலப் போட்டியிலும் நான் பங்கேற்ற அணி முதலிடம் பிடித்தது. இதனால்,  தமிழக அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து, ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில்  தமிழக அணிக்கு மூன்றாமிடம் கிடைத்தது. இதேபோல, ராஜஸ்தானில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்துப் போட்டியில் எங்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 9-ம் வகுப்பு படிக்கும் போது, புனேவில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் நான் பங்கேற்ற தமிழக அணி இரண்டாமிடம் பிடித்தது. அண்மையில் கோவையில் நடைபெற்ற தேசிய இளையோர் கூடைப்பந்துப் போட்டியில் நாங்கள் இரண்டாமிடம் பிடித்தோம். மேலும், எங்கள் பள்ளியில் நடைபெற்ற, மாநிலப்  போட்டியில் இரண்டாமிடம் பிடித்தோம்.  இதேபோல, கோவையில் நடைபெற்ற தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில், பள்ளியின் முக்கிய வீராங்கனைகள் இல்லாத நிலையிலும், சிறப்பாக விளையாடி எங்கள் அணி வெற்றி பெற்றது.

இதில் எனக்கு சிறந்த வீராங்கனை விருது வழங்கப்பட்டது. சர்வதேச அளவிலான போட்டியில் விளையாட வேண்டும் என்பதே  என்னுடைய லட்சியம்.  அதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார். மாணவி சி.காவ்யா கூறும்போது, “என் தந்தை கே.சந்திரசேகர்,  பீளமேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். அம்மா சி.ஜீவிதா. ஆறாம் வகுப்பு முதல் கூடைப்பந்துப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். போட்டியில் நான் சென்டர் பிளேயராக விளையாடுவேன். 8-ம் வகுப்பு படிக்கும்போது ஈரோட்டில்  மாநில இளையோர் கூடைப்பந்துப் போட்டியில் விளையாடினேன். அதில் எங்கள் அணி மூன்றாமிடம் பிடித்தது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, திருச்சியில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றோம். தொடர்ந்து,  ராஜஸ்தானில் நடைபெற்ற மினி நேஷனல் கூடைப்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்தோம். மாவட்டப் போட்டிகளில் சென்னை அணியும், மாநிலப் போட்டிகளில் கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் அணிகளும்  எங்களுக்கு சவாலாக இருந்தன. அவர்களுடன் கடுமையாக போராடி வென்றோம்” என்றார்.

கடந்த வாரம் காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, தென்னிந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் இப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 

“பள்ளியின் முன்னாள் முதல்வர் செலீனா, தற்போதைய பள்ளி முதல்வர் மரியா ஜார்ஜ், பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் எங்களை சிறப்பாக வழிநடத்தினர். அதேபோல, பல்வேறு சமயங்களில் பயிற்சியளித்த ராம்குமார்,  குமணன், முருகேசன், ரகுகுமார் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். சர்வதேசப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று, சாம்பியன் பட்டம் வெல்வதே எங்கள் இலக்கு” என்கின்றனர் இந்த  மாணவிகள் தன்னம்பிக்கையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x