

சென்னை
டெல்லி லக்னோ, காந்திநகர் மும்பைக்கு முதல்கட்டமாக தனியார் ரயில்களை இயக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் தனியார் ரயில்கள் இயக்குவது குறித்து ஐஆர்சிடிசி ஆய்வு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் இயக்கப்படும் 12,617 பயணிகள் ரயில்களில் தினமும் 2.30 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில் ரயில் போக்குவரத்து அத்தியாவசியமாகி விட்டது.
ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீர மைப்பது குறித்து கடந்த 2014-ம் ஆண்டு விவேக் தேவ்ராய் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2015-ம் ஆண்டு 300 பக்க அறிக்கை யை அளித்து, பல்வேறு முக்கிய பரிந்துரைகளையும் தெரிவித்தது.
அதன்படி, மண்டல பொது மேலா ளர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரம் அளித்தல், ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை, பயணிகள் ரயிலை தனியார் இயக்குவது, வருவாய் பெருக்க ரயில்வே மண்டல அதி காரிகளுக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரை களை ரயில்வே துறை அறிமுகம் செய்து வருகிறது.
இதற்கிடையே, பயணிகள் ரயில்களை தனியார் இயக்கு வதில் மத்திய ரயில்வே அமைச்ச கம் ஆர்வம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக தென் மாநிலங்களில் ஒன் றும், வட மாநிலங்களில் ஒன்றும் என 2 தனியார் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்தது.
தனியார் ரயில்கள் இயக்கவுள்ள வாய்ப்புகள், வழித்தடம், கட்டண விபரம், பயணிகளுக்கான சேவை கள், ரயில்வேக்கு வருவாய் ஈட்டி தருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ஆய்வு செய்த ஐஆர்சிடிசி இறுதி அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமீபத்தில் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில், முதல் கட்டமாக டெல்லி லக்னோ, காந்திநகர் மும்பைக்கு தனியார் ரயில்களை இயக்க ரயில்வே ஒப்பு தல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசியின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முதல்கட்டமாக 2 தனியார் ரயில் கள் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது 2 வழித்தடங்களைத் தேர்வு செய்து வாரியத்திடம் அளித்தோம். அந்த வகையில், முதல்கட்டமாக டெல்லி லக்னோ, காந்திநகர் மும்பைக்கு தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்காக டிவி, ரேடியோ, வைஃபை, உணவுகள் விநியோ கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் புதியதாக தயாரிக்கப் பட்ட ரயில்கள் மேற்கண்ட தடங் களில் இயக்கப்படவுள்ளன. சதாப்தி அதிவிரைவு ரயில்களைவிட சற்று கூடுதலாக கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதற்கிடையே, 2-வது கட்டமாக சில முக்கிய வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்குவது குறித்து ஆய்வுப் பணிகள் மேற் கொண்டு வருகிறோம். ரயில் சேவை தேவையுள்ள வழித்தடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, ரயில் வேக்கு வருவாய் தருவதோடு, பயணிகளுக்கு கூடுதல் கட்டண சுமையும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்து ஆய்வு நடத்தி வருகிறோம்.
2-ம் கட்ட திட்டத்தில் தென் மாநிலங்களில் சில தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.