

ஆர்.சிவா
தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூர் வட்டம் புன்னையடி கிராமத்தில் ஏழ்மையான குடும் பத்தில் 1947-ம் ஆண்டு பிறந்தவர் ராஜகோபால். குடும்ப வறுமையால் 7-ம் வகுப்புடன் படிப்பு நின்றது. சென்னை வந்து ஓர் ஓட்டலில் மேஜை துடைக்கும் வேலை பார்த்தார். டீ போட கற்றுக்கொண்டு, அதே கடையில் டீ மாஸ்டர் ஆனார். பின்னர் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்தார்.
சிறிது காலத்தில், தந்தை மற்றும் உறவினரின் உதவியுடன் சென்னை கே.கே.நகரில் ஒரு மளிகைக் கடை ஆரம்பித்தார். தொழில்ரீதியில் இது அவருக்கு முதல் முயற்சி என்பதால் பல சவால்களை எதிர்கொண்டார்.
இதற்கிடையில், கடை வாடிக் கையாளர் ஒருவர், ‘‘நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால், கே.கே.நகரில் இருந்து தி.நகர் போகவேண்டி இருக்கிறது’’ என்று கூறியுள்ளார். இந்த யோசனையில் உருவானதுதான் கே.கே.நகரில் 1982-ல் உதயமான ‘சரவண பவன்’. ராஜகோபால் முருக பக்தர் என்ப தால் தன் மகனுக்கு சரவணன் என்று பெயரிட்டார். அதே பெய ரையே ஓட்டலுக்கும் வைத்தார்.
ஓட்டலில் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று மக்கள் சந்தேகப்பட்ட காலகட்டத்தில், ‘சரவண பவனில் நம்பி சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும். உடல்நலத்தையும் பாதிக்காது’ என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத் தினார்.
4 மணி நேரத்துக்கு ஒருமுறை சட்னி, 10 மணி நேரத்துக்கு ஒருமுறை சாம்பார் என ஒவ்வொரு உணவுக்கும் நேரம் நிர்ணயித்து, அவ்வப்போது புதிது புதிதாக சமைத்து வழங்கினார். விற் பனையாகாமல் இருக்கும் உணவு அந்த நேரத்தை கடந்துவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க மாட்டார்.
தரமான உணவை வழங்க அதிகம் செலவானதால், ஆரம்ப காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உணவகம் நடத்தும் முடிவில் ராஜகோபால் உறுதியாக இருந்தார். உணவகம் மீதான மதிப்பு கூடக் கூட, அந்த இழப்புகள் எல்லாம் லாபங்களாக மாறின.
மலிவு விலைப் பொருட்களை வாங்குவதில்லை, தரத்தில் சமரசம் செய்வதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருந்தார். உணவின் சுவையும், தரமும் சரவண பவனுக்கு என தனி வாடிக்கையாளர்களை பெற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்தது சரவண பவன்.
படிப்படியாக தொழில் நுணுக் கங்களைக் கற்று, சில ஆண்டு களிலேயே தமிழகம் மட்டுமல்லா மல் நாடு முழுவதும் 33-க்கும் அதிகமான கிளைகள், வெளிநாடு களில் 45-க்கும் அதிகமான கிளை கள் என சரவண பவன் ஓட்டலின் கிளைகள் விரிவடைந்தன. சரவண பவன் ஓட்டலின் நற்பெயர் பல மடங்கு உயர்ந்தது. ஓட்டல் துறை யில் மாபெரும் உச்சம் தொட்டார் ராஜகோபால்.
ஐக்கிய அரபு நாடுகளில் 9 இடங்கள், அமெரிக்காவில் 6, ஐரோப்பாவில் 4, கனடாவில் 5, மலேசியாவில் 4, சிங்கப்பூரில் 4 கிளைகள் மட்டுமின்றி, ஏமன், கத்தார், பக்ரைன், பிரான்ஸ் என பல நாடுகளில் சரவணபவன் கிளைகள் உள்ளன. தென்னிந்திய உணவின் சிறப்பை உலகம் முழு வதும் கொண்டு சென்ற சிறப்பும் ராஜகோபாலையே சேரும். பல கிளைகள் இருந்தாலும், அனைத்திலும் சுவை ஒன்றுபோல இருப்பது அதன் சிறப்பம்சம்.
ஊழியர்களின் பணிச் சூழலை யும் மேம்பட்டதாகவே வைத்திருப் பார். ஓட்டல்களில் சாப்பாட்டு தட்டு மீது வாழை இலை வைக்கும் முறையை இவர்தான் கொண்டு வந்தார். ‘வாடிக்கையாளர்களுக் கும் திருப்தி, என் ஊழியர்களுக்கு தட்டைக் கழுவும் வேலை எளிது’ என்பாராம்.
ஊழியர்கள் கட்டாயம் முடி வெட்டி, சவரம் செய்திருக்க வேண்டும். ஊழியர்கள் யாரும் இரவுக் காட்சி சினிமா செல்ல அனுமதி கிடையாது. மறுநாள் வேலை பாதிக்கப்படும் என்பாராம்.
ஊழியர்கள் பிள்ளைகளின் கல்விச் செலவை வழங்குவது, ஊழியருக்கு உடம்பு சரியில்லை என்றால், அவரைப் பார்த்து கொள்ள நிர்வாகத்தில் 2 பேரை நியமிப்பது என ஊழியர்களின் நலனிலும் அக்கறை கொண்டிருந் தார். ஓர் ஊழியரின் குடும் பத்தை நல்லபடியாக கவனித்துக் கொண்டால், அந்த ஊழியர் மூலம் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பார்.
ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ராஜகோபால், ஜோதிட ரின் சொல்படியே அனைத்து செயல்களையும் செய்வார். கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கினார். சரவண பவன் ஓட்டல்கள் அனைத்திலும் முருகன் படத்துக்கு இணையாக வாரியார் சுவாமிகளின் படமும் பிரம்மாண்ட அளவில் இருக்கும். தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் ‘நவதிருப்பதி’ என்கிற பிரம்மாண்ட கோயிலை உருவாக்கினார். திருச் செந்தூர், வடபழனி உட்பட பல முருகன் கோயில்களுக்கு நன்கொடைகளை வழங்குவதை வழக்கமாகவே வைத்திருந்தார்.
உழைப்பால் உயர்ந்து, ஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்ட ராஜகோபால், தன் ஓட்டலின் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது திருமணம் செய்ய ஆசைப்பட்டு, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கியது சரவண பவன் ஊழியர்கள் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘நான் பார்த்துப் பார்த்து உரு வாக்கிய ஓட்டல் சரவண பவன். நான் இறக்கும் நாளில்கூட சரவண பவன் திறந்தே இருக்க வேண்டும்’ என்று பலமுறை கூறியிருக்கிறார் ராஜகோபால். அவரது ஆசைப்படி, சரவண பவன் உணவகங்கள் நேற்றும் வழக்கம்போல் திறந்தே இருந்தன. இரவு 8 மணிக்கு பின்னர் மூடப்பட்டன.