'அவசர சிகிச்சை டெக்னீஷியன் படிப்பு' படித்த 2500 மாணவர்கள்; வேலை கொடுக்காத அரசு: மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

'அவசர சிகிச்சை டெக்னீஷியன் படிப்பு' படித்த 2500 மாணவர்கள்; வேலை கொடுக்காத அரசு: மருத்துவர்கள் சங்கம் கண்டனம்
Updated on
1 min read

தமிழக அரசின்  (Emergency care technician) அவசர சிகிச்சை நுட்புனர்கள் படிப்பு படித்த 2500 மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை அளிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு  மற்றும் அவசர சிகிச்சை நுட்புனர்கள் சங்கம் சார்பில் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில்,

அவசர சிகிச்சை தொழில் நுட்புனர்கள் (Emergency care technician) படிப்பு  2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஓராண்டுப் படிப்பான இந்தப் படிப்பை முடித்துவிட்டு, 2500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களில் ஒருவருக்குக் கூட, இதுவரை அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படாதது இப்படிப்பை படித்தவர்கள் மத்தியில் கவலையையும், விரக்தியையும் உருவாக்கியுள்ளது.

இப்படிப்பைத் தொடங்கிய அரசு, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காதது கண்டனத்திற்குரியது. இப்படிப்பைப் படித்தால், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்து, தமிழக அரசு , கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை ஏமாற்றியுள்ளது.

இது ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. வேலை வாய்ப்பைப் பெற முடியாத படிப்புகளை தமிழக அரசு தொடங்கியது. அதன்  தவறான கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தியுள்ளது. தனது தவறான கொள்கைக்கு தமிழக அரசே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, இப்படிப்பை படித்தவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், உரிய பணியிடங்களை உருவாக்கி, உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்”.

இவ்வாறு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in