

கோவை
கோவையில் பாழடைந்த வீட்டில் நடைபெற்ற சோதனையில், 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை ராம்நகர், சரோஜினி நாயுடு வீதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் செல்ல முயன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீஸார் விசாரிக்கும் போது, சரோஜினி நாயுடு வீதிக்கு அருகேயுள்ள மாளவியா வீதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இன்று சோதனை நடத்தினர். 15 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிக் கிடக்கும் இந்த வீட்டில், சோதனையின் போது, ஒரு இடத்தில் பீரங்கி குண்டு கிடந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காட்டூர் போலீஸார் கூறும் போது, ''இந்த வீடு கீர்த்தி ராமசாமி ஐயர் என்பவருக்குச் சொந்தமானது. ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் சார்-ஆட்சியராகப் பணியாற்றி வந்த அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். அவரது மருமகன்களான சுப்பிரமணியம், கோபால் ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். 2-ம் உலகப் போரிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் கோபாலுக்கு பழங்காலப் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது.
போரின்போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டை ஞாபகார்த்தமாக வைத்திருக்க அதைச் சேகரித்து வைத்துள்ளார். அந்த பீரங்கி குண்டுதான் தற்போது கைப்பற்றப்பட்டது ஆகும். 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏழரை கிலோ எடை கொண்ட இந்த பீரங்கி குண்டு 20 செ.மீ. உயரம் கொண்டதாக உள்ளது. இந்த பீரங்கி குண்டு தற்போது ஆயுதப்படை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது'' என்றனர்.