Published : 18 Jul 2019 05:29 PM
Last Updated : 18 Jul 2019 05:29 PM

நல்லகண்ணு, கக்கன் மகனுக்கு வாடகையில்லா வீடு: சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் ஆர்.நல்லகண்ணு மற்றும் மறைந்த அமைச்சர் பி.கக்கன் வாரிசுதாரர்களுக்கு வாடகையின்றி வீடு ஒதுக்கித் தரப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நல்லகண்ணு மற்றும் மறைந்த கக்கன் குடும்பத்தார் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து தமீமுன் அன்சாரி எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அளித்த விளக்கம்:

“நகர அபிவிருத்தி கழகத்தின் மூலம் 1953-ம் ஆண்டில் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் 119 வீடுகள் சிஐடி காலனியில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்தக் காலனியில் பிளாட் எண்.35 ஆனது மறைந்த அமைச்சர் பி.கக்கனுக்கு 1971-ம் ஆண்டில் வாடகையின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1981-ல் அவரது இறப்பிற்குப் பின்னர் அவரது மனைவி சொர்ணம் பார்வதி என்பவருக்கும், 27.06.1987ல் சொர்ணம் பார்வதி இறப்பிற்குப் பின்னர் பெரியவர் பி.கக்கன் மகன்கள் பி.கே.சத்யநாதன் மற்றும் பி.கே.ராஜமூர்த்தி ஆகியோருக்கும் வாடகையின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2004-05ல் இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், வீடுகளை இடித்துவிட்டு, ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்த வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பெரியவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு 2007-ம் ஆண்டில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2011-ல் வீட்டு வசதித் துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுயநிதித் திட்டத்தில் புதிய அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2011-ல் அனைத்து குடியிருப்புதாரர்களுக்கும் குடியிருப்பினைக் காலி செய்ய தாக்கீது அனுப்பப்பட்டது. இத்தாக்கீதினை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், புதுடெல்லி உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வகையான வழக்குகளைத் தொடுத்தனர்.

வழக்குகளில் இறுதியாக சென்னை, உயர் நீதிமன்ற நீதிப்பேராணை மார்ச்- 5-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மார்ச் 31-ம் தேதி வரை மட்டும் குடியிருக்க வழக்குத் தொடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனவே, ஏப்ரல் 1-ம் தேதி வழக்கு தொடர்ந்த நபர்களின் குடியிருப்புகள் காலி செய்யப்பட்டன. மொத்தம் உள்ள 119 குடியிருப்புகளில் இதுவரை 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளை வாரியத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் மே.10-ம் தேதியன்று ஆர்.நல்லகண்ணு ஐயா தாமாகவே முன் வந்து வீட்டைக் காலி செய்துள்ளார். ஆனால் இதுநாள் வரை முறையாக வாரியத்திடம் ஒப்படைப்பு செய்யவில்லை. பெரியவர் மறைந்த பி.கக்கன் குடும்பத்தினர் இதுவரை குடியிருப்பினை ஒப்படைக்கவில்லை.

தற்போது அரசு, சமூகத்தில் மிகவும் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத நபர்களுக்கு, வாரியத்தில் மூலமாக பொது ஒதுக்கீட்டு முறையில் வீடுகள் வழங்குவது வழக்கமாக உள்ள நடைமுறைதான், இந்தப் பிரச்சினை வெளியே வந்த போது, நானே நல்லகண்ணு ஐயாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரிகளை அனுப்பி வைக்கிறேன், உங்களுக்கு பிடித்தமான வீடுகள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். உடனே நாங்கள் பொது ஒதுக்கீட்டில் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறினேன்.

ஏனென்றால் இந்த வீடு 1953-ல் கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது, என்று கூறினேன். அவர், பரவாயில்லை நான் ஒரு வீடு பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

நல்லகண்ணு ஐயா மற்றும் பெரியவர் பி.கக்கன் அவர்களின் வீட்டைப் பொறுத்தவரையில், அவர்களைக் கட்டாயப்படுத்தி காலி செய்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானது, அதை நான் முழுமையாக மறுக்கிறேன்.

இந்த இரு மாபெரும் தலைவர்களுக்கு, அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அரசு சார்பில், அவர்கள் விரும்பிய இடத்தில் வாடகையின்றி வீடு ஒதுக்கித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x