Published : 18 Jul 2019 04:38 PM
Last Updated : 18 Jul 2019 04:38 PM

எக்காரணம் கொண்டும் 100 நாள் வேலை திட்டத்தைக் கைவிடக்கூடாது: முத்தரசன்

எக்காரணம் கொண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தைத் கைவிடக்கூடாது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "வேலை உறுதியளிப்பு திட்டத்தைக் கைவிடும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில், வேலை உறுதியளிப்பு திட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

வேளாண்மைத் துறையில் நவீன இயந்திரங்கள் பெருமளவு பயன்படுத்தும் நிலையில், வேளாண் தொழில் ஒன்றையே நம்பியுள்ள கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலை நாட்கள் பெருமளவு குறைந்து விட்டது. வேலை வாய்ப்பின்றி, பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும் குடிபெயர்ந்து செல்லும் அவலமான நிலைகள் தடுக்கப்பட வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பற்ற ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து இடம் பெயர்தலை தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்திட வேண்டும். வேலை நாட்களை நூறு நாட்களிலிருந்து இருநூறு நாட்களாக அதிகப்படுத்தி தினசரி ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்திட வேண்டும் என்றும் இத்திட்டத்தை கிராமம் சார்ந்த பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டுமென வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விவசாயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தை தொடர அரசுக்கு விருப்பம் இல்லை என்று அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தை நம்பியே உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டே தங்களின் வாழ்நாளினை கழித்துக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்பு ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழியற்ற நிலையை ஏழைகளுக்கு ஏற்படுத்தும் அபாயகரமான அறிவிப்பாகும். மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதுடன், எக்காரணம் கொண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தை கைவிடக் கூடாது, மேலும் இத்திட்டத்தை பலப்படுத்தி, செயல்படுத்திட வேண்டும்", என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x