

தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கில் எவ்வித முடிவும் வராத நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிப்பு மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்த விரும்புவதால் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியில்லை என மக்கள் நீதிமய்யம் அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பணம் பிடிபட்டது காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு 38 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணி 37 இடங்களை வென்றது. அதிமுக 1 இடத்தைப் பெற்றது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமமுக தோல்வியை தழுவியது. ஆனாலும் வாக்குகள் சதவீதத்தில் 3 வது இடத்தைப் பெற்றது. அடுத்து கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தென்சென்னை, வடசென்னை கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளைப்பெற்றது. இதனால் 4-ம் இடத்தைப்பிடித்தது.
இந்நிலையில் வேலூர் தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியில்லை என அமமுக மற்றும் மக்கள் நீதிமய்யம் அறிவித்ததன்மூலம் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப்போட்டி நடக்க உள்ளது.
தேர்தல் புறக்கணிப்புக்குறித்து மக்கள் நீதிமய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் விடுத்துள்ள அறிக்கை:
“நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களின் போது வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப் பட்டுவாடா சட்ட விரோதமாகவும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப் பட்டது என இந்திய ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ, முடிவுகளோ அடைவதற்கு முன்னரே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின்மீதும், தேர்தல் ஆணையத்தின் மீது மக்களின் நம்பிக்கையினமை அதிகரித்திருக்கின்றது.
இச்சூழலில் மக்களின் நம்பிக்கையை காப்பது என்பது மிக முக்கியம் எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது எதிர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அக்கட்சியின் செயற்குழுவால் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது”
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.