Published : 01 Jul 2015 08:10 AM
Last Updated : 01 Jul 2015 08:10 AM

குடியாத்தம் அருகே வெடிமருந்து வெடித்து பட்டாசு தொழிற்சாலை தரைமட்டம்: 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்

குடியாத்தம் அருகே உள்ள கல்லப் பாடி முதலியார் ஏரிப் பகுதியில் நாட்டு வகை பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் குடோன் உள்ளது. இதன் உரிமையாளர் குடியாத்தம் நகரைச் சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.சம்பத். இவரது தொழிற் சாலையில் ராமாலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பட்டாசு மருந்து திடீ ரென வெடித்து சிதறியது. இதில், பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடு பட்டிருந்த ராமாலை கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் (35), சர்வேசன் (36), ஜீவிதா (25), மணிமேகலை (40) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.

பட்டாசு தொழிற்சாலைக்கு வெளியே இருந்த ராமாலை கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, சுமதி, கற்பகம், தீபா, பொன்னாம்மாள், பத்மாவதி மற்றும் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பாபு ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு குடியாத்தம் மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

பட்டாசு தொழிற்சாலை கட்டிடம் முழுவதும் வெடித்து தரைமட்டமானது. இந்த சத்தம் சுமார் 1 கி.மீ தொலைவுக்கு கேட்டுள்ளது. கட்டிட இடிபாடுகள் சுமார் 150 அடி தொலைவுக்கு சிதறின. தொழிற்சாலை சுவரில் இருந்த கற்கள் சிதறியதில் அருகில் இருந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்தன. இறந்த தொழிலாளர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதறியதில் சுமார் 150 அடி தொலைவுக்கு உடலுறுப்புகள் சிதறிக் கிடந்தன.

இந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், டிஐஜி தமிழ்சந்திரன், எஸ்பி செந்தில்குமாரி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இறந்தவர்கள் அனைவரும் ராமாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கள். எனவே, அவர்களது உறவினர் கள் அனைவரும் ராமாலை கிராமத்தில் சாலையோரம் காத் திருந்தனர். அவர்களை ஆட்சியர் ஆர்.நந்தகோபால் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் அந்த வழியாக வந்த டிஐஜி மற்றும் எஸ்பியின் வாகனத்தையும் சிறைபிடித்தனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த ஆட்சியர் நந்தகோபால், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் செய்ய வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என உறுதியளித்தார்.

இந்த விபத்து தொடர்பாக வட மேற்கு மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் கூறும்போது, ‘‘வனப்பகுதியை ஓட்டிய இடத்தில் இந்தப் பட்டாசு தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை இயங்கியுள்ளது. இங்கு நாட்டுவெடி வகை பட்டாசு தயாரிக்கும் பணி நடந்துள்ளது. இந்த தொழிற்சாலைக்கு எங்கள் தரப்பில் இருந்து தடையில்லாத சான்று எதுவும் வழங்கவில்லை.

சுமார் 20 அடி அகலம், 20 அடி நீளமுள்ள கட்டிடம் முழுவதும் வெடித்து தரைமட்டமாகியுள்ளது. அதிக அளவில் பட்டாசு குவித்து வைத்தது, பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தால் கட்டிட மும் வெடித்து பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்’’ என்றார்.

தடய அறிவியல் ஆய்வு

இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற் சாலையின் உரிமையாளர் சம்பத்தை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x