Published : 18 Jul 2019 03:48 PM
Last Updated : 18 Jul 2019 03:48 PM

புதிய மாவட்டங்கள் வரவேற்கத்தக்கவை; தமிழகத்தை 60 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும்: அன்புமணி

புதிய மாவட்டங்கள் வரவேற்கத்தக்கவை எனவும், மற்ற மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் எனவும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தமிழக சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி,  வேறு சில புதிய மாவட்டக் கோரிக்கைகள் பற்றி அரசு ஆய்வு செய்து முடிவெடுக்கும் என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறார். காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும்  தமிழக அரசின் முடிவு மிகவும் சரியான நடவடிக்கை ஆகும்.

நிலப்பரப்பின் அடிப்படையில் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் தான். மொத்தம் 6,810 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் மிக அதிகமாக 13 வட்டங்கள் உள்ளன. 10 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட நெல்லை மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரப்பட்டு வந்தது.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் நிலப்பரப்பில் சற்று சிறியதாக இருந்தாலும் மக்கள் தொகையில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாவட்டம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள்தொகை 39.98 லட்சம் ஆகும். இம்மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதன் மூலம் அங்கு வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் மிக நீண்ட எல்லைகளைக் கொண்ட மாவட்டம் வேலூர் மாவட்டம் ஆகும். வேலூர் மாவட்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்ல 220 கி.மீ. பயணிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த எல்லையிலிருந்து வேலூருக்குச் செல்வதாக இருந்தாலும் குறைந்தது 100 கி.மீ. கடக்க வேண்டும். இது நிர்வாக வசதிக்கு எவ்வகையிலும் ஏற்றதல்ல.

அதனால், வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்ட மூன்று புதிய மாவட்டங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக ஏராளமான அறப்போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. ஆனால், இதுவரை புதிய மாவட்டங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகியவையும் 5000 சதுர கி.மீ.க்கு அதிக பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டங்கள் ஆகும். ஒரு மாவட்டம் இந்த அளவுக்கு பரந்து விரிந்து கிடப்பது அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்காது. ‘சிறியது தான் அழகு என்ற தத்துவத்தின்படி பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை அதிகம் உருவாக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் தொடக்கத்தில் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவை மொத்தம் 31 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அந்த மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரிக்க ஆணையிட்டுள்ளார். இதற்கு அம்மாநிலத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் பெரியவையாகவே உள்ளன. ஒவ்வொரு மாவட்டமாகப் பிரிப்பதை விட இந்த மாவட்டங்களை ஒரே நேரத்தில் பிரிப்பது தான் சரியாக இருக்கும்.

அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை மறுவரையறை செய்து 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்காக 'தமிழ்நாடு மாவட்டங்கள் மறுவரையறை ஆணையத்தை' தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்", என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x