Published : 18 Jul 2019 12:49 PM
Last Updated : 18 Jul 2019 12:49 PM

புதிய மாவட்டங்களாக உதயமாகும் தென்காசி, செங்கல்பட்டு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண். 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள்:

நூறாண்டுகள் நிறைவு செய்யும் விழுப்புரம் நகராட்சிக்கு 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம், 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். சர்வதேச அளவில் கொள்முதல் செய்ய ஏதுவாக, மின்னணு வசதியுடன் கூடிய ஏலக்கூடம், சிப்பம் கட்டும் கூடம், அலுவலகக் கட்டடம், தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், குளிர்பதன அறை போன்ற வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்படும். மலர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதுடன், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, அந்நிய செலாவணியையும் அதிகரிக்கும்.

தற்போது பெரிய மாவட்டங்களாக உள்ள திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள், நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். இவ்விரு மாவட்டங்களுக்கும் தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தனி அதிகாரியாக நியமிக்கப்படுவர்.

ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று, தீர்வு காண, முதல்வரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கோட்டங்களுக்கு 6.26 கோடி ரூபாய் செலவில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டடங்களும், நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ். மங்கலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி, கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருவட்டார் மற்றும் கிள்ளியூர், திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வத்ராயிருப்பு மற்றும் கரூர் மாவட்டத்தில் புகளூர் ஆகிய 13 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் 60.18 கோடி ரூபாய் செலவிலும், ஆக மொத்தம் 66.44 கோடி ரூபாய் செலவில் மேற்கண்ட கட்டடங்கள் கட்டப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சூரிய ஒளியில் செயல்படும் மீன் உலர் கூடங்கள் அமைக்கவும், மீன்வள சூழலை மீள ஏற்படுத்த செயற்கை உறைவிடங்கள் அமைக்கவும், கடல் / உவர் நீர் மீன் குஞ்சு வங்கி அமைக்கவும், ஒருங்கிணைந்த கடல் மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்கவும், மீனவ மக்களின் மாற்று வாழ்வாதாரத்திற்காக மெல்லுடலிகள் மற்றும் கடற்பாசி வளர்ப்பு அலகுகள் ஏற்படுத்தவும், மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தவும், 31.15 கோடி ரூபாய் செலவில் வழிவகை செய்யப்படும்.

மேம்படுத்தப்பட்ட 29 நகரங்களில், வகையீட்டு பூகோள நிலைக்கலன் கருவி மற்றும் மின்னணு நில அளவைகளைப் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மறு நில அளவை பணிகள் 30.29 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, 3 தொகுதிகளாக 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.

அனைத்து பழங்குடியின மக்கள் சொந்த வீட்டில் குடியிருப்பதை உறுதி செய்ய வீடுகள் கட்டித் தருதல், அவர்களின் குடியிருப்புகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருதல், இணைப்பு சாலைகள் மற்றும் பாதைகள் இல்லாத இடங்களில் இணைப்பு சாலை மற்றும் பாதை அமைத்துத் தருதல், தெரு விளக்கு மற்றும்

சூரிய மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருதல் ஆகிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும்.

 நடப்பு கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எழுத்தூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பாச்சேரி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசவெளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காப்புரம் ஆகிய 3 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன்னாடு அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் 6.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலை உயர்த்தப்படும்.

ஆதிதிராவிட மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை அனைத்து வசதிகளுடன் மகிழ்ச்சியாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடும் வகையில், மதுரை மாவட்டம்-கே.புளியங்குளம், கரூர் மாவட்டம்-வாங்கல் குச்சிபாளையம், தருமபுரி மாவட்டம் - காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் - 82 கவுண்டம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் - ரெங்கசமுத்திரம் ஆகிய 5 கிராமங்களில், அனைத்து வசதிகளுடன் கூடிய 5 சமுதாயக் கூடங்கள், தலா 1 கோடி ரூபாய் வீதம், 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

இவ்வாறு அறிவித்தார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x