

வேலூர்
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மற்றும் அவரது மனைவி சங்கீதா வசம் ரூ.58 கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 767 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுத்தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி யில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவர், நேற்று மனுத்தாக்கல் செய்த நிலையில் அவரது சொத்து விவர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1995-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பை முடித்துள்ள அவர் 1997-ல் அமெரிக்காவின் பால்ட்வின் அண்டு வால்லஸ் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். இவரது மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோர் உள்ளனர்.
கதிர் ஆனந்த் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் கையிருப்புத் தொகையாக ரூ.19 லட்சத்து 3 ஆயிரத்து 16-ம், சங்கீதா வசம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879-ம் உள்ளது. இந்தியன் வங்கியில் தேர்தல் செலவுக்காக ரூ.70 லட்சத்து 17 ஆயிரம் இருப்பு வைத்துள்ளார். கதிர்ஆனந்த் வசம் 3,664 கிராம் தங்கம், 3 காரட் வைரம், 31.702 கிலோ வெள்ளியும் உள்ளன. சங்கீதா வசம் 1,003 கிராம் தங்கம், 1.5 காரட் வைரம், 10.868 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. மகள் செந்தாமரை வசம் 975 கிராம் தங்க நகைகள் உள்ளன.
கதிர் ஆனந்த் வசம் 2 இன்னோவா கார்கள், 1 லேண்ட் க்ரூசர் கார், 1 டொயோட்டா பார்ச்சூனர், 1 டெம்போ டிராவலர், 3 டிராக்டர் மற்றும் 1 டிராக்டர் டிரெய்லர் உள்ளது. பல்வேறு வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத் தொகை, வைப்புத் தொகை, பங்கு முதலீடு என அசையும் சொத்துக்களாக கதிர்ஆனந்த் வசம், ரூ.14 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 870 ஆக இருக்கிறது. சங்கீதா வசம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 618 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் கொத்த கொட்டாய், கண்டிப்பேடு, வண்டறந் தாங்கல், சேர்க்காடு, தாராபடவேடு, காட்பாடி காந்திநகர், ஏலகிரி, ஈரோடு, சென்னை நீலாங்கரை, சென்னை டிடிகே சாலை, சென்னை தி.நகர், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகம், தாராபுரம், சென்னை அடையாறு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் மற்றும் காலி மனைகள், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அசையா சொத்துக்களின் மதிப்பாக கதிர்ஆனந்த் வசம் ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 இருக்கிறது. சங்கீதா வசமாக ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. கதிர் ஆனந்துக்கு கடன் ஏதும் இல்லை. ஆனால், அவரது மனைவி சங்கீதாவுக்கு ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 கடன் உள்ளது.
அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக கதிர்ஆனந்த் வசம் மொத்தம் ரூ.41 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரத்து 488, சங்கீதா வசம் மொத்தம் ரூ.16 கோடியே 66 லட்சத்து 97 ஆயிரத்து 279 என இருவரின் மொத்த சொத்துக்களின் மதிப்பாக ரூ.58 கோடியே 43 லட்சத்து 82 ஆயிரத்து 767 ஆக உள்ளது.
நிலுவையில் 3 வழக்குகள்
கதிர் ஆனந்த் மீது கடந்த 2002-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2007-ம் ஆண்டு தள்ளுபடியான நிலையில் 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் நிலுவையில் உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், 2013-14 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்த குற்றச்சாட்டு கூறப் பட்டுள்ளது. இந்த வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலில் வாக் காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வருமான வரித்துறையினரின் குற்றச் சாட்டின் அடிப்படையில் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.