Published : 18 Jul 2019 10:57 AM
Last Updated : 18 Jul 2019 10:57 AM

உபயோகப்படுத்தும் அளவை பொறுத்து குடிநீருக்கு கட்டணம்: மின் கட்டணம் போல் வசூல் செய்ய மாநகராட்சி ‘ஹைடெக்’ திட்டம்

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை மாநகராட்சியில் பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 100 வார்டுகளிலும் மின்கட்டணத்தைப் போல் உப யோகப்படுத்தும் அளவுக்கு ஏற்ப குடிநீர் கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்ய மாநகராட்சி ‘ஹை டெக்’ திட்டத்தை செயல் படுத்த உள்ளது.

மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக் குறையைப் போக்க ரூ. 1,020 கோயில் பெரியாறு அணை யில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் பெறும் பெரியாறு குடிநீர் திட்டம் நிறை வேற்றப்பட உள்ளது.

இந்த திட்டம் பகுதி-1, பகுதி-2, பகுதி-3 என 3 கட்டங்களாக நிறைவேற்றப் படுகிறது. தற்போது பகுதி-2 திட்டம் டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பகுதி-1-க்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது வைகை அணை நிரம்பினாலும் மதுரை மாநக ராட்சியால் 100 வார்டு களுக்கும் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவி ல்லை. பழைய 72 வார்டுகளில் 30 வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்கள் 1924-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. மீதி 42 வார்டுகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. இந்த குழாய்கள் பழுதடைந்து அடிக்கடி உடைந்து போகின்றன. அதனால், மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கும், பொது குடிநீர் குழாய்களுக்கும் சரியாக குடிநீர் விநியோகம் செய்ய முடி யவில்லை.

அதனால் வைகை அணையில் இருந்து வரும் தண்ணீரை அப்படியே பம்பிங் செய்து குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. அதனால், 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில் குடிநீர் சென்றடையவில்லை. அவர்கள், மின் மோட்டார், கை பம்புகளை கொண்டு குடிநீரை உறிஞ்சும் நிலை உள்ளது. புறநகர் வார்டுகளில் காவிரி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. அது போதுமானதாக இல்லாமல் லாரி மூலமும் குடிநீர் வழங்குகின்றனர்.

தற்போது பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 100 வார்டுகளிலும் பழைய குழாய்களை மாற்றும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் அரசு கூறியதாவது: பெரியாறு குடிநீர் திட்டத்துடன் சேர்த்து இந்த குடிநீர் குழாய்களை மாற்றும் திட்டம் ரூ. 530 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. தற்போது 44 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. அவற்றை பராமரித்து மேலும் 37 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன. குடிநீர் குழாய்களை மாற்றிய பிறகு, இந்த 81 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்தும், அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

பழைய குடிநீர் குழாய்களை மாற்ற மதிப்பிடப்பட்ட ரூ. 530 கோடியில் நகரின் மையப்பகுதியில் உள்ள 50 வார்டு களுக்கு ரூ. 77 கோடி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஒதுக்கப்பட்டு குடிநீர் குழாய் மாற்றப்படுகிறது.

இதற்கான டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்க ப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளுக்கு ஆசியன் வங்கியில் ரூ.220 கோடி கடன் பெற்று குடிநீர் குழாய் மாற்றப்படுகிறது. மீதி வார்டுகளுக்கு குடிநீர் குழா ய்களை மாற்ற ரூ.233 கோடி ஒதுக்கப்படுகிறது. பெரியாறு குடிநீர் திட்டம் மூலம் வருவாயை பெருக்கி அதன் மூலம் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்கள் அனைத்தும் மாற்றப்பட்ட பிறகு மின் கட்டணம் போல் குடிநீரை உபயோகப் படுத்தும் அளவுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். இதற்காக ஸ்கடா சிஸ்டம் (Scada system) குடிநீர் குழாய்கள் சென்சார் மூலம் ஆன்லைனில் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் பயன்பாட்டை கண்காணித்து, அதற்கு தகுந்தார்போல் குடிநீர் கட்டணத்தை மாதம்தோறும் அதிகாரிகள் வசூல் செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x