

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கட்சி என, நாட்டைத் துண்டாடும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த பாஜகவால் முடியாது. இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது என்பது, ஒன்றும் உலக சாதனை அல்ல. இந்திரா காந்தி, நேரு உள்ளிட்டவர்கள் 18-20 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளனர். ராஜீவ் காந்தி தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளார். மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார்.
பிரதமர் மோடி: கோப்புப்படம்
இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மக்கள் 5 ஆண்டுகளுக்குத்தான் ஆட்சியைத் தந்துள்ளனர். எனவே, ஆயுள்காலமாக இந்தியாவை பிரதமர் மோடிக்கு மக்கள் எழுதித் தந்துவிடவில்லை.
அதனால், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி என நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறேன் என சொல்லி, நாட்டைப் பல துண்டுகளாக்கும் முயற்சியில் தான் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்", என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.