Published : 18 Jul 2019 10:35 AM
Last Updated : 18 Jul 2019 10:35 AM

ஆரோக்கியமே அழகு!- `திருமதி உலக அழகி’ போட்டியாளர் வினோதினி 

ஆண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது போல, பெண்கள் தங்களது உடல் நலனில் பெரிய அளவுக்கு கவனம் செலுத்துவதில்லை. கணவர், குழந்தைகள், குடும்பம், வேலை என 24 மணி நேரமும் பிறருக்காக வாழும் பெண்கள், தங்களுக்காக குறைந்தபட்சம் அரை மணி நேரத்தையாவது ஒதுக்கி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம்தான் உண்மையான அழகு என்பதை உணர வேண்டும்” என்கிறார் `திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்க உள்ள கோவை வினோதினி கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு வயது 38.

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள அவரதுபெற்றோர் வீட்டில் சந்தித்தோம். “அப்பா கிருஷ்ணமூர்த்தி, அம்மா கிரிஜா. கோவை பாப்பநாயக்கன்பாளையம்தான் பூர்வீகம். அவிலா கான்வென்ட் பள்ளியில் பிளஸ் 2 முடித்த பின்னர், நேரு மகா வித்யாலயா கல்லூரியில் வணிக மேலாண்மை படித்தேன். 2003-ல் 
திருமணம். கணவர் சஞ்சீவ், மகள் தாஷா.

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஈடுபட்டேன். 1997-ல் ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்றேன். கணவர் மஸ்கட்டில் வியாபாரம் செய்கிறார்.

2018-ல் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற, ‘மிசஸ் இந்தியாவேர்ல்டு வைடு’ பட்டம் வென்றேன். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான திருமதி அழகிப் போட்டியான இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 87 பேர் கலந்துகொண்டனர். வரும் அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் ‘திருமதி உலக அழகி’ போட்டி நடைபெறுகிறது. இதில் 47 நாட்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தென்கிழக்கு ஆசியப் பிரதிநிதியாக நான் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் வென்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தர வேண்டுமென்பதே எனது லட்சியம். இதில், உடல் அழகுடன், மன உறுதி, தன்னம்பிக்கை, பொது அறிவு, செயல்பாடுகள் என அனைத்தும் மதிப்பிட்டு, வெற்றிக் கோப்பையை வழங்குவர். மஸ்கட்டில் `ஜூம்பா’ என்ற நடன உடற்பயிற்சி கற்றுத் தரும் பயிற்சியாளராக  இருக்கிறேன். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவையே இளமையாக இருக்கச் செய்கிறது. பொதுவாக, ஆண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை கொள்வதைப்போல, பெண்கள் பெரிய அளவுக்கு உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை. இது மிகவும் தவறானப் போக்கு.

‘வேலைக்குச் செல்வதும், வீட்டைப் பராமரிப்பதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. இதில் உடற்பயிற்சி செய்ய நேரம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான், வீட்டைப் பராமரிக்க முடியும். எனவே, எவ்வளவு வேலைகள் இருந்தாலும், குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும். வெளிநாட்டுப் பெண்கள் தங்களது உடலில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர். இந்தியப் பெண்களிடையே இது கொஞ்சம் குறைவுதான். இந்த நிலை மாற வேண்டும். உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ மேற்கொள்ள கூச்சப்படத் தேவையில்லை. 
அதேபோல, வாழ்க்கை முறை, உணவுக் கட்டுப்பாட்டிலும் அக்கறை செலுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகள், உடலுக்கு மிகவும் உகந்தவை.

குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் சாப்பிடும் உணவை, நாகரிகம் என்ற பெயரில் நாம் சாப்பிடு
கிறோம். வெப்ப மண்டல நாடான நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற உணவை சாப்பிடுவதே நல்லது. அதேபோல, பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்கப்படும் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.

உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமல்ல, மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். செல்போன் பயன்பாடு இனி தவிர்க்க முடியாதது. அதேசமயம், அதிலேயே மூழ்கிவிடாமல், உடல் நலன் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.  இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக  பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும்.  குழந்தைகள் நம்மிடமிருந்துதான் பெரும்பாலானவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள்.  நமது செயல்பாடுகள், அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால், அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் நமது செயல்கள் இருக்க வேண்டும்.

மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்டு போட்டிகளைக் காட்டிலும், மிஸஸ் வேர்ல்டு போட்டிகளில் தயாராகுபவர்
களுக்கு சவால்கள் அதிகம். ஏனெனில், குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, குடும்பத்தாரின் நலன் மீதான அக்கறை, சமூகக் கட்டுப்பாடுகள், குடும்பத்தாரின் ஒத்துழைப்பின்மை என பல பிரச்சினைகள் இருக்கும். இதைத் தாண்டித்தான் சாதிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, கணவர் மற்றும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு  மிக அதிகம். அதனாலேயே, என்னால் பட்டங்களை வெல்ல முடிந்தது” என்றார் நெகிழ்ச்சியுடன் வினோதினி கிருஷ்ணமூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x