தமிழகத்தில் பொருளாதார ரீதியிலான 10 சதவீத இட ஒதுக்கீடு அர்த்தமற்றது: அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம்
அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் பொருளாதார ரீதியிலான 10 சதவீத இட ஒதுக்கீடு அர்த்தமற்றது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"தமிழக அரசு தமிழகத்தின் உரிமைகளுக்கு எந்தவித பங்கமும் வராமல் நடந்துகொள்ளும். பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், ஒருமித்த கருத்து அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும் என, ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதுகுறித்த தமிழக அரசின் நிலைப்பாடு மத்திய அரசிடம் எடுத்து வைக்கப்படும். யாருக்கும் அடிமை சேவகம் செய்யும் அரசாங்கம் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு அல்ல", எனத் தெரிவித்தார். 

இதையடுத்து, 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், "தமிழகத்தில் வளர்ந்த சமூகத்தினர் 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் உள்ளனர். கிரீமி லேயர் அடிப்படையிலான வருமான எல்லையை அடிப்படையாகக் கொண்டால், 90 சதவீதத்தினர் இந்த இட ஒதுக்கிட்டின் கீழ் பயன்பெறுபவர்களாக இருப்பர். அதனால், எல்லோருக்குமே இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது வரும். அது முறையல்ல என்பது மத்திய அரசுக்கே தெரியும்.

வட மாநிலங்களில் 50 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில், 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் அர்த்தமற்றதாக இருக்கும் என்பது மத்திய அரசுக்கே தெரியும். யார் என்ன சொன்னாலும், மத்திய அரசுடன் நல்லுறவு வைத்துக்கொள்வோமே தவிர, அடிமை சேவகம் செய்ய மாட்டோம்", என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in