Published : 18 Jul 2019 10:26 AM
Last Updated : 18 Jul 2019 10:26 AM

நெருக்கடியில் தவிக்கும் சிறு, குறுந்தொழில் துறை!- கொசிமா தலைவர் எஸ்.சுருளிவேல் கவலை

ஆர்.கிருஷ்ணகுமார்

சிறு, குறுந் தொழில் துறை மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தொழில்முனைவோரும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோமோ என்ற கவலையில் உள்ளனர். இத்துறையை மீட்டெடுக்கவும், கைகொடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று காத்திருக்கிறோம்”என்கிறார் கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.சுருளிவேல்(56). கோவையின் அடையாளங்களில் ஒன்று சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாகத் திகழ்பவை சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள். ஆனால், பல்வேறு நெருக்கடிகளால் தவிக்கின்றனர் தொழில் முனைவோர். தொழில் நிறுவனங்களில் 30 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தி குறைந்துள்ளதும், ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த சூழலில்தான்  கொசிமா எனப்படும் கோவை சிட்கோதொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.சுருளிவேலை சந்தித்தோம்.

“பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள மகிபாலன்பட்டி என்ற கிராமம். பெற்றோர் சிவப்பிரகாசம்-ராமாயி. விவசாயக் குடும்பம். வறட்சியால் விவசாயம் பொய்த்துப் போனதால் 1955-ல் கோவையில் தனியார் பஞ்சாலைக்கு வேலைக்கு வந்தார் அப்பா. குடும்பத்தையும் கோவைக்கு அழைத்து வந்துவிட்டார். நான் கார்மல் கார்டன் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு, பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. படித்தேன்.
சிட்கோ தொழிற்பேட்டை!

இதற்கிடையில் கோவை ராமநாதபுரத்தில் சிறிய அளவிலான இன்ஜினீயரிங் நிறுவனத்தைத் தொடங்கிய அப்பா, வாகன கியர் தயாரிப்பில் ஈடுபட்டார். கல்லூரிப் படிப்பு முடித்தவுடன், நானும் அப்பாவின் தொழில் நிறுவனத்துக்கு வந்துவிட்டேன். நவீன இயந்திரங்களுடன் தொழிலை கொஞ்சம் விரிவுபடுத்தினேன். 1973-ல் கோவையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் ‘சிட்கோ’ தொழிற்பேட்டையைத் தொடங்கினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் கொடிசியா தொழிற்பேட்டைக்கு எங்கள் நிறுவனத்தை கொண்டுவந்தோம். ஆரம்பத்தில் நான் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தில்  (கொடிசியா) அங்கம் வகித்து, செயலராகப் பொறுப்பு வகித்தேன்.

பின்னர், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தி யாளர்கள் நலச் சங்கத்தில் இணைந்து, உதவி செயலர் உள்ளிட்ட பொறுப்பு வகித்தேன். 2017-ம் ஆண்டு முதல் கொசிமா சங்கத்தில் தலைவராக பொறுப்பு வகிக்கிறேன். 1973-ல் 80 ஏக்கரில் உருவாக்கப்பட்டபோது, 220 நிறுவனங்கள் அமைக்கஇடம் ஒதுக்கப்பட்டது. கிளஸ்டர் போல ஒருங்கிணைந்த தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறை. ஆரம்பத்தில் 8 நிறுவனங்கள்இங்கு வந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 240 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. சில பெரிய நிறுவனங்களும் இங்கு தொழில் நடத்துகின்றன.

வார்ப்படத் தொழில், கியர் தயாரித்தல், இன்ஜினீயரிங் தொடர்பான பல்வேறு உதிரி பாகங்கள் தயாரித்தல், அலுமினியம் வார்ப்படம், வால்வுகள், கல் உடைக்கும் இயந்திரம், தேயிலை தயாரிக்கும் இயந்திரம், சோலார் மின் சாதனங்கள் என பல்வேறு வகையான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், பவுண்டரி, பட்டறைகளும் உள்ளன.
அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

1973-ல் அமைக்கப்பட்ட சாலை மிகவும் பழுதடைந்ததால் 15 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், உரிய பராமரிப்பின்மையால் தற்போது சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.  அதேபோல, குடிநீர் வசதியும் கிடையாது. 2012-ல் மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் சிட்கோ நிதி மூலம், தொழிற்சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டு, அனைத்து நிறுவனங்களுக்கும் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இதுவரை தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட குடிநீர் கட்டணம் ரூ.28 லட்சம் பாக்கி உள்ளதாகவும், அதைக் கட்டினால் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் சிட்கோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடிநீர் இணைப்பு கொடுங்கள், பழைய பாக்கியை கட்டி விடுகிறோம் என்று பலமுறை தெரிவித்தும், அமைச்சரிடம் முறையிட்டும்கூட இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், வெளியில்
இருந்துதான் குடிநீரை வாங்குகிறோம். இதேபோல, பொதுக்கழிப்பிட வசதியும் கிடையாது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட
லாரிகள் வந்து, செல்கின்றன. ஏராளமான டிரைவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் வருகின்றனர். பொதுக்கழிப்பிடம் இல்லாததால், அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சிட்கோ வளாகத்தில் இருக்கும் தெருவிளக்குகளும் சரிவர எரிவதில்லை. 24 மணி நேரமும் செயல்படும் சிட்கோ தொழிற்சாலை, மாலை நேரத்துக்குப் பிறகு இருண்டு காணப்படுகிறது.
1998-ல் கோவை  குண்டு வெடிப்பு, 2010-ல்
மின் வெட்டுப் பிரச்சினை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்தித்தோம். அதிலிருந்து மீள்வதற்குள் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி-யால் நெருக்கடி!

வரலாறு காணாத அளவுக்கு ஜாப் ஆர்டர் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்
பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, வரியை செலுத்தவில்லையெனில், கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு நிறுவனம் ரூ.20 ஆயிரம் வரி செலுத்தவில்லை என்றுகூறி, அடுத்த மாதம் ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்தனர். இப்படி இருந்தால் எப்படி தொழிலைத் தொடர்ந்து நடத்துவது? அதேபோல, ஜிஎஸ்டி நடைமுறைகள் சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பல நிறுவனங்கள் வாரத்தில் 4, 5 நாட்கள்தான் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் 30 சதவீதம் உற்பத்தி குறைந்துவிட்டது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டிபோடவே முடியவில்லை. ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் ஆர்டர்களையும் பெற முடியவில்லை.பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களில் 20 முதல் 25 சதவீதத்தை சிறு, குறுந் தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் பொதுத்துறை நிறுவனங்களின் ஆர்டர்கள் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை.

ஜிஎஸ்டி வரி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டுமென்ற எங்கள் கோரிக்கையை, ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிசீலனைக்குக்கூட எடுக்க மறுக்கிறார்கள். இதேபோல, ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. ஒரே ஒரு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தால் போதும் என்றார்கள். ஆனால், 9 வகையான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி அதிகாரிகள், ஆடிட்டர்களே இந்த வரி விகிதத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். அப்படியானால், தொழில் முனைவோரின் நிலை எப்படியிருக்கும்? 

இதேபோல, வங்கிக் கடனுதவி நடைமுறைகளும், கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இனி வருங்காலங்களில்  பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் டீசல் வாகனங்களே இருக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதனால், ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கும். ஏனெனில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 400 பாகங்கள் தேவைப்படும் என்றால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 5, 10 என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உதிரி பாகங்களே தேவைப்படும்.

இதுபோன்ற பிரச்சினைகள் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை மிகப் பெரிய சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு, குறுந் தொழில்துறையைப் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். எங்களது கோரிக்கைகளை ஏற்றால்மட்டுமே தொழில் துறை தப்பிப் பிழைக்க முடியும். லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு, குறுந் தொழில்துறையைப் பாதுகாக்கவும், தொழில்முனைவோர் வாழ்வாதாரத்தை  இழக்காமல் இருக்கவும் அரசின் கருணையை  எதிர்
பார்த்துக் காத்திருக்கிறோம்” என்றார் கவலையுடன் எஸ்.சுருளிவேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x