

தனியார் உணவகத்தில் அமைக் கப்பட்டுள்ள, பண்டைய மாமல்ல புரத்தின் அழகிய தோற்றத்தை விவரிக்கும் ஓவியங்களை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக கண்டு ரசிக்கின்றனர். மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் கால சிற்பக் கலை திறனை பறைசாற்றும் இடமாக அமைந்துள்ளது. இங்குள்ள குடைவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.
இதனால், சர்வதேச சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது. பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கடல்வழி வாணிபம் அதிகமாக நடைபெற்று, துறைமுகப் பட்டினமாக விளங்கியதாக சான்றுகளில் கூறப்படுகிறது.
பல்வேறு வரலாற்று சிறப்பு வாய்ந்த, துறைமுகப்பட்டினமாக விளங்கிய மாமல்லபுரம் நகரம், பல்லவ மன்னர்களின் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை விளக்கும் வகையில், அங்கு உள்ள சிற்பக் கலை கல்லூரியில் முன்பு சுதை சிற்ப பிரிவின் பயிற்றுநராக பணிபுரிந்த சின்னையா என்பவர், தனது கற்பனை மூலம் அக்காட்சிகளை கடந்த 1959-ம் ஆண்டு ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியங்கள், அப்பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தின் கடற்கரையில் பண்டமாற்று முறையில் கடல்வழி வாணிபம் நடைபெற்றதை விளக்கும் பழமையான ஓவியம்.
இந்த ஓவியங்களில் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்கடல்வழி வாணிபம் நடைபெற்றபோது இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில், கடற்கரை கோயில் அருகே கடற்கரையில் படகுகள் நிறுத்தப்பட்டிருப்பது போன்றும், நகரின் அழகிய தோற்றம் மற்றும் கடற்கரையில் பண்டமாற்ற முறையில் கடல்வழி வாணிபம் நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பழமையான அழகிய ஓவியங்களை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். இதுகுறித்து, உணவகத்தின் உரிமையாளர் ஜனார்த்தனன் கூறும்போது, ‘‘மாமல்லபுரத்தில் அரசு சிற்பக் கலை கல்லூரி செயல்பட்டு வந்தது.
இதில், சுதை வடிவ சிற்ப பிரிவில் பயிற்றுநராக பணியாற்றி வந்த உத்திரமேரூரைஅடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்த சின்னையா, எனது நெருங்கிய நண்பர். அவர் தனது கற்பனையில் இந்த ஓவியங்களை வரைந்து எனக்கு வழங்கினார். அதனை அனைவரும் கண்டு ரசிக்கட்டும் என்பதற்காக எனது உணவகத்தில் வைத்துள்ளேன்’’என்றார்.