

எரிபொருள் ஆவியாகி சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதை தடுக்கும் தொழில்நுட்பத்தை, அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
மத்திய அரசின் மனிதவளத் துறை சார்பில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி, கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 2.5 லட்சம் மாணவர்கள் மென்பொருள் தயாரிப்பு திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) மெக்கானிக்கல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் பி.பால குமரன், டி.புவன்பரத், எஸ்எஸ் மௌலிதரன், டி.பரணி, எஸ்.கார்த்திக், மாணவி எஸ்.அபிதா ஆகியோர், இணைப் பேராசிரியர் கே.ரமேஷ் வழிகாட்டுதல்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அளித்திருந்த, ‘எரிபொருள் ஆவியாவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைந்த செலவில் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பை தேர்வு செய்து, அதற்கான அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த புதிய தொழில்நுட்பம், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
எரிபொருள் ஆவியாவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைந்த செலவில் கட்டுப்படுத்த, ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் கடந்த 2 மாதங்களாக ஈடுபட்டோம்.
எரிபொருள் நிரப்பி வைத்துள்ள டேங்கை திறந்தால் ஆவியாகி வீணாகும். இதனால் சுற்றுச்சூழல் மாசு
படும். பெட்ரோல், டீசல் டேங்குகளில் இருந்து வாகனத்தில் எரிபொருள் நிரப்புவது வரையிலான பொருட்களை உருவாக்கினோம்.
‘ராப்பிட் ப்ரோட்டோ டைப்’ முறையில் தரைத்தள எரிவாயு டேங்க், கன்டென்சர், கம்பிரஷர், கன்(gun) போன்றவற்றை ஏபிஎஸ் செயற்கை இழை (ஃபைபர்) மூலமாக தயாரித்து காட்சிப்படுத்தினோம். நாங்கள் வடிவமைத்த தொழில்நுட்பம் முதல்பரிசுபெற்றது. இதை பாராட்டி மத்திய அரசின் மனிதவளத்துறை ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கியது என்றனர்.