Published : 17 Jul 2019 03:55 PM
Last Updated : 17 Jul 2019 03:55 PM

‘க்ரைம்’ கதை மன்னனுக்கு பொன் விழா!

ஏறத்தாழ 1,500 நாவல்கள், 2,000 சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்தவர் `க்ரைம் கதை மன்னன்’ ராஜேஷ்குமார். இவர் எழுதத் தொடங்கி 50 ஆண்டுகளாகிவிட்டன. இதையொட்டி கோவையில் ஒரு பொன்மாலைப் பொழுதில் நடைபெற்றது பொன்விழா. 

‘ஏ காஃபி வித் யுவர் ராஜேஷ்குமார்’ என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்கள் பாரதிய வித்யா பவன் தலைவர்  கிருஷ்ணராஜ் வாணவராயர், ஜீரணநலத் துறை நிபுணர் மோகன்பிரசாத். ஏற்புரையுடன்,  வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார் ராஜேஷ்குமார். மருத்துவர் மோகன் பிரசாத், பல குட்டிக்கதைகளை நகைச்சுவையாக சொல்லி,  அரங்கை குலுங்க வைத்தார்.

கிருஷ்ணராஜ் வாணவராயர் தனக்கே உரிய மென்மையான  மொழியில், சிந்திக்க வைக்கும்படி பேசினார்.

“சாதனையாளர்களை பாராட்டுவதில் சுணக்கம் கூடாது. சாதனையாளர்களை வெளிநாட்டுக்காரர்கள் கொண்டாடினால், நாமும் பாராட்ட முற்படுகிறோம். அங்கீகாரம் என்பது உரிய நேரத்தில் தரப்பட வேண்டும். அதேபோல, அங்கீகாரத்தை எதிர்பாராமல் இருக்கும் சாதனையாளர்களுக்கு அதை தர வேண்டும். தகுதியற்றவர்களை அங்கீகாரம் போய்ச்சேருவது ஆபத்தானது. அங்கீகாரத்தை எதிர்பாராது,  கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர் ராஜேஷ்குமார். 

நம் மீது வெளிச்சம் படாதா என்று ஏங்கும் விளம்பர உலகில், வெளிச்சம்பட்டுவிடக் கூடாது என ஓடி ஒளிபவர். எனக்குத் தெரிந்து உலகில் 50 ஆண்டுகளில் 1,500 நாவல்கள், 2,000 சிறுகதைகளை  எழுதியவர்  அநேகமாக இவர் ஒருவராகத்தான் இருப்பார். எல்லோருக்குள்ளும் கற்பனை வளம் இருக்கிறது. அதை எல்லோரும் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். 

ஐம்பது ஆண்டுகளாகியும் இன்னும் க்ரைம் கதைகள் எழுதுவதில் ராஜேஷ்குமாருக்கு அலுப்பில்லை. அவற்றை வாசிக்கும் வாசகர்களுக்கும் அலுப்பில்லை. குற்றங்கள் நடக்கும்வரை கதை எழுதுவதற்கான விஷயங்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும். நூறாண்டுகள் ஆனாலும் குற்றங்கள் நடக்காமல் இருக்கப் போவதில்லை.

அதனால் நீங்கள் இன்னும் நூறாண்டுகளுக்கு எழுதிக்கொண்டே இருப்பீர்கள். அதேபோல, வெறுமனே க்ரைம் கதைகளை எழுதுவதுடன், மாதத்துக்கு ஒரு கதையாவது சமூக நலம் பேணும் படைப்பாக இருக்க வேண்டும். ராஜேஷ்குமாரின் எழுத்து குறித்து, அவரது மனைவி ஓர் அனுபவ நூல் எழுத வேண்டும்” என்றார் கிருஷ்ணராஜ் வாணவராயர்.

ஏற்புரையாற்றிய ராஜேஷ்குமார் “எழுத்து எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. எத்தனை காலத்துக்குத்தான் இப்படி எழுதிக் கொண்டே இருப்பீர்கள். இனியாவது ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என பிள்ளைகள் வற்புறுத்தினார்கள். எழுதுவதால்தான் என்  வயது இன்னமும் 20-ல் இருக்கிறது. 

எழுதுவதை நிறுத்தினால் நான் 80 வயது முதியவனாகி விடுவேன் என்று அவர்களுக்கு பதில் கூறினேன். என்னை இன்னமும் இளமையாக வைத்திருப்பது வாசகர்கள்தான். நான் க்ரைம் கதைகளை மட்டுமே எழுதுவதாக வாணவராயர் கருதுகிறார். சமூக சிந்தனையுள்ள பல நூல்களையும் நான் எழுதியுள்ளேன்” என்று கூறி, சில நூல்களைப் பட்டியலிட்டார் ராஜேஷ்குமார்.

- கா.சு.வேலாயுதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x