Published : 17 Jul 2019 03:40 PM
Last Updated : 17 Jul 2019 03:40 PM

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்: தமிழக அரசின் இரட்டை வேடம்- முத்தரசன் கண்டனம்

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் இரட்டை வேடம் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. மத்திய அரசின் நடவடிக்கைகளை, மாநில மக்கள் நலன் கருதி துணிவோடு எதிர்க்க வேண்டிய மாநில அரசு “பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்” என்ற முறையில் இரட்டை வேடம் போடுவது ஏன் என கேள்வி எழுகின்றது.

உதாரணமாக நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு கோரி பேரவை நிறைவேற்றிய இரு மசோதாக்கள் குறித்து, முதல்வரும் இன்ன பிற அமைச்சர்களும், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம், விலக்கு கிடைக்குமென உறுதியாகத் தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே, பேரவை மசோதாக்களை நிராகரித்து விட்டோம் எனக் கூறுகின்றது.

ஹைட்ரோ கார்பன் போராட்டம்

இதேபோன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் தினசரி நடைபெற்று வருகின்றன. அண்மையில் விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்டத் தியாகியுமான ஆர்.நல்லகண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். இதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசியதுடன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்திட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினார். ஆனால் மத்திய அரசு செயல்படுத்திட தொடர்ந்து அனுமதி அளித்து வருகின்றது.

கல்விக் கொள்கை குறித்து மவுனம்

விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ள கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு இந்நாள் வரை எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றது. திரைப்படக் கலைஞர் சூர்யா கல்விக் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் எனபதற்காக, அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சூர்யாவை வசைபாடுகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு எதிராகச் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஆதரிக்கின்றதா? எதிர்க்கின்றதா? என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு உரிமைகள் நலன்கள் அனைத்தும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் நிலையில், அதற்கு மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இத்தகைய இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்’’.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x