Published : 17 Jul 2019 03:30 PM
Last Updated : 17 Jul 2019 03:30 PM

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...

கடவுள் என்னும் முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி... என்று விவசாயியைப் பற்றி பாடலாசிரியர் அ.மருதகாசி அன்றே பாடியிருக்கிறார். `முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து, முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து, மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’ என்றும் எங்களைப் பெருமைப்படுத்தியிருப்பார். இப்போதோ, கடவுள் மட்டுமல்ல, இயற்கையும் கைவிடத் தொடங்கிவிட்டது.

அடுத்த தலைமுறை விவசாயத்தில் ஈடுபடுவது அரிதாகி வருகிறது. இப்படியே போனால் விவசாயம் என்னவாகும் என்றே தெரியவில்லை” என்கிறார் கோவையைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ்(58).

கோவை பூலுவப்பட்டி டிபிஎஸ்.தோட்டம் பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ள தங்கராஜை சந்தித்தபோது, வேளாண் சாகுபடியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும் கவலையுடன் விவரித்தார்.

“பெற்றோர் சுப்பண்ண கவுண்டர்-தேவாத்தாள். அப்பவெல்லாம் நிறைய தண்ணீர் இருந்ததால, தென்னை, கரும்பு, வாழைனு சாகுபடி செஞ்சாரு அப்பா. ஆலாந்துறை உயர்நிலைப் பள்ளியில 10-ம் வகுப்பும், தொண்டாமுத்தூர் மேல்நிலைப் பள்ளியில பிளஸ் 2-வும் முடிச்சேன். சின்ன வயசுலே இருந்தே மாட்டுக்கு தண்ணி காட்டறது, தொழுவத்தை சுத்தம் செய்யறது, காட்டு வேலைங்க செய்யறதுனு எல்லா வேலையும் செஞ்சேன். குழந்தைகள் 8 பேருங்கறதுனால, 10 ஏக்கர்ல விவசாயம் செஞ்சும், கஷ்டம்தான் இருந்தது. பிளஸ் 2 முடிச்சவாட்டி முழு நேர விவசாயப் பணிக்கு வந்துட்டேன்.

வறண்டு போனது கிணறு!

ஆரம்பத்துல கரும்பு, வாழைனு விவசாயம் செஞ்சாலும், ஒரு கட்டத்துல தண்ணீர் இல்லாததால அதையெல்லாம் கைவிட்டோம். இப்ப வெங்காயம், வெண்டை, கத்தரி, மிளகாய் சாகுபடி செய்யறோம். சொட்டுநீர்ப் பாசனம்தான் கைகொடுக்குது. ஆரம்பத்துல கிணத்துல 80 அடியில தண்ணீர் இருந்தது. கடந்த 4 வருஷமா போதுமான மழையில்லாததால கிணறு வறண்டு போயிடுச்சு. நிலத்தடி நீர்மட்டமும் 800 அடிக்குப் போயிடுச்சு.

சுத்துவட்டாரப் பகுதியில பயிர் சாகுபடி செஞ்சிக்கிட்டிருந்த நிலமெல்லாம் வீட்டுமனைகளாக மாறிடுச்சு. இப்பகுதியில் இருக்கற குளம், குட்டையெல்லாம் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு இல்லாததுனு வறண்டுபோச்சு. மழை பெய்தாலும், தண்ணீர் செல்லும் பாதையெல்லாம் தூர்ந்து போனதால நீர்நிலைகளுக்கு தண்ணீர் போறது கிடையாது. நொய்யல் ஆறு, வாய்க்கால், நீர்த்தேக்கம், குளம், குட்டைனு நீர்நிலையெல்லாம் தூர் வாரி பல வருஷமாச்சு. இதனால் தண்ணீர் தேங்க வழியில்லாம, வீணாகப் போகுது. தண்ணீர் தேங்காததால, நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதே இல்லை.

குளம், குட்டை, வாய்க்கால்களை எல்லாம் தூர் வாரணும்னு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துக்கிட்ட பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. இப்ப நான் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டிருக்கிறேன். வெண்டையைப் பொறுத்த வரைக்கும் 120 நாள் பயிர். 45-வது நாளில் இருந்து காய் எடுக்கலாம். தரமான விதை இருந்தா 60 முறை காய் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 8 டன் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 2 முதல் 2.50 கிலோ விதை தேவை. இப்பவெல்லாம் 
ஒரு கிலோ விதை ரூ.3 ஆயிரத்துக்கும் மேல விக்குது.

நிலத்தை சமன்படுத்தி, 4, 5 முறை உழுது, தொழு உரம் போட்டு நிலத்தை தயார் படுத்தணும். தொழு உரத்துக்காகவே மாடுகளை வளர்க்கறோம். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, பாத்திகட்டி விதைக்கறோம். தொடர்ந்து உயிர் தண்ணீர் கொடுக்கணும். 20 நாள் கழித்து களை எடுப்போம். அப்புறம் உரம் போட்டு, 45 நாள்ல முதல் பறிப்பில் ஈடுபடுவோம். நோய், பூச்சித்தாக்குதலை தடுக்கவும் வாரம் ஒருமுறை மருந்தடிப்போம். நுண் ஊட்டச்சத்தும் தரணும். காய் பறிச்சவாட்டி, தரம்பிரித்து, வியாபாரிக்கு கொடுப்போம்.

விளை பொருளுக்கு விலை இல்லை...

எவ்வளவு கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சாலும், வியாபாரி நிர்ணயிக்கறதுதான் விலை. தரமான காய்க்கு அதிகபட்சமாக கிலோ 
ரூ.30-ம், சுமாரான காய்க்கு ரூ.15-ம் கிடைக்கும். ஆனால், கடையில இதைப்போல ரெண்டு மடங்குக்கு மேல விற்கப்படும். எங்க விளை பொருளுக்கு நாங்களே விலை நிர்ணயம் செய்யற நிலை வந்தால்தான், விவசாயி பொழைக்க முடியும்.

அதேபோல, தரமான விதை, இடுபொருட்களும் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனம் தரமான விதைகளைக் கொடுக்காத
தால, சாகுபடி பாதிக்கப்படுது. இதுகுறித்து அதிகாரிகள்கிட்ட புகார் செஞ்சா, அவங்க கம்பெனிக்காரங்களுக்கு சாதக மாகத்தான் நடந்துக்கறாங்க. அதேபோல, பூச்சிக்கொல்லி மருந்தும் எங்களுக்கு வேண்டியது கிடைக்காது. அவங்க கொடுக்கறதைதான் பயன்படுத்தணும்.

எனக்கு 1999-ல் திருமணம் நடந்தது. மனைவி கீதா. அவங்களும் என்னோட காட்டு வேலை செய்யறாங்க.  மகள் சுகஸ்ரீ, மகன் ராஜ்திலக்  கல்லூரியில் படிக்கிறாங்க.  விவசாயத்தை மட்டும் நம்பி, குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைக்க முடியாது. பகுதி நேரமாக வேறு வேலை செய்ய வேண்டியிருக்குது. அதேபோல, இப்பவெல்லாம் விவசாயினு சொன்னா மரியாதையே இல்லை. ஆனா, எங்களுக்கு இதைத்தவிர வேறு வழியும் இல்லை.

அடுத்த தலைமுறை விவசாயத்துக்கு வரமாட்டாங்க. கட்டிட வேலைக்குப் போனாலும் போவேன், விவசாய வேலைக்கு வரமாட்டேன்னு சொல்றாங்க. இப்ப விவசாய வேலைக்கு வர்றவங்க எல்லாம் வயசானவங்கதான். வேலைக்கு ஆள் கிடைக்காததால, விவசாயத்தையே கைவிட்ட பல விவசாயிகள் உண்டு. விவசாய நிலத்தை வித்து, சோறு திங்க வேண்டியிருக்கு.

நீராதாரங்களை சீரமைக்கவும், தரமான இடுபொருட்கள் கிடைக்கவும், வேளாண்மைக் கான மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கே கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கணும். அதேபோல, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கொடுக்கணும். இதெல்லாம்தான் கொஞ்சம் கொஞ்சமாக அழிஞ்சிக்கிட்டிருக்கற விவசாயத்தை காப்பாத்தும்” என்றார் வேதனை
யுடன் தங்கராஜ்.

இவர், கடந்த 2012-ல் மலரும் வேளாண்மை அமைப்பு சார்பில் சிறந்த விவசாயிக்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. `காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’ - இது விவசாயிகளின் நிலையை பல ஆண்டுகளுக்கு முன்பே அழுத்தமாகச் சொன்ன பாடல். இன்னமும் விவசாயிகளின் வேதனை  மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. 

விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கிற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகினாலும், விவசாயியின் நிலை கேள்விக்குறிதான். உலகத்துக்கே உணவிடும் விவசாயி பட்டினி கிடக்கும் நிலையைவிட அவலம் ஏதுமில்லை. இனியாவது இந்த நிலை மாற வேண்டுமே என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x