

எச்.ஐ.வி. பாதித்தவர்கள் ஆதரவில்லாமல் இறப்பது அதிகரிப்பதாகவும், அவர்களை பாதுகாக்க மாவட்டம்தோறும் பராமரிப்பு மையமும், ‘ஹெல்த் இன்சூரன்ஸ்’ திட்டமும் செயல்படுத்த வேண்டும் எனவும் எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் எச்ஐவியால் பாதிக்கப் பட்டவர்கள் 2 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மாநில எச்ஐவி பாஸிட்டிவ் கூட்டமைப்பை உருவாக்கி, ஒருங் கிணைந்து செயல்படுகின்றனர். இவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர்.
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பு மூலமாக, மாவட்டம் தோறும் எச்ஐவி உள்ளவர்களுக்கு அன்பு, ஆதரவு, பராமரிப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சமுதாயரீதியான புறக்கணிப்பை போக்குவதற்கும், அரசு நலத் திட்டங்களை எளிதில் பெற்றுத் தரவும் முன்பு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிதி உதவியுடன் இளைப்பாறுதல் (DIC) மையம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
உலக வங்கி நிதிக் குறைப்பால் 2012-ல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. ஆதரவற்ற நிலையில் உள்ள எச்ஐவி பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளையும், இறக்கும் தருவாயில் இருப்பவர்களையும் பராமரிப்பதற்கு மண்டல வாரியாக ஒரு ஒருங்கிணைந்த ஆதரவு பராமரிப்பு மையம் இல்லை. ஒரு சில மாவட்டங்களில் சமூக நலத்துறை உதவி பெற்று செயல்படும் பொதுவான ஆதரவற்ற இல்லத்தில் ஆரோக்கியமாக இருப்பவர்களை மட்டும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், முடியாமல் இருக்கும் நோயாளிகளை சேர்ப்பதில்லை.
அதுபோல், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சொந்த வீடு இல்லாதவர்கள் வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள். தொடர்ந்து உடல்நிலை முடியாமல் இருந்தாலோ, அவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டது வெளியே தெரிந்தாலோ அவர்களுக்கு வாடகை வீடு கொடுக்காமல் வெளி யேற்றப்படுகிறார்கள்.
அதனால், எச்ஐவி பாதித்தவர்களை பாதுகாக்க மாவட்டம் தோறும் பராமரிப்பு இல்லங்கள் இல்லை என்றும், வெறும் மருந்து மட்டுமே தருகிறார்கள், சத்தான உணவு சாப்பிட உதவி கிடைக்கவில்லை என்று எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பினர் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு பொருளாளர் கருணாகரன் கூறியதாவது: எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம், விபத்தில் ஏற்படும் பலத்த காயம், சிறுநீரகம் டயாலிசிஸ், தலைக் காயம், எலும்பு முறிவு சிகிச்சைகளுக்கு ரூ. 5 லட்சம் வரை செலவாகிறது. அதனால், அனைவருக்கும் தமிழக அரசின் ஹெல்த் இன்சூரன்ஸ் ரூ.4 லட்சம் வரை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் தடையில்லா சிகிச்சை கிடைக்காமல் இறப்பு அதிகமாகிறது. அவர்கள் குடும்பங்கள், குழந்தைகள் ஆதரவற்று நிற்கின்றனர். அதனால், அதிகமாக எச்ஐவி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை, சத்தான உணவு மற்றும் ஏஆர்டி மருந்துகள் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால் ஏற் படும் பக்க விளைவுகளுக்கும், ரத்த சோகை, தோல் அலர்ஜி, காச நோய், நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட மற்ற சந்தர்ப்ப வாத நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க தனியாக கம்யூனிட்டி கேர் சென்டர் எச்ஐவி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் செயல் படுத்த வேண்டும்.
எச்ஐவியால் பாதித்த தந்தையை இழந்த அல்லது பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து படிக்க வசதியின்றி வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. இந்த குழந்தைகள் இலவசமாக உயர்கல்வி படிக்க புதிய சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.