

வைகோ எம்.பி.யாக பதவியில் நீடிப்பதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி குடியரசு துணைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நெறிமுறை கமிட்டி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் காலியான 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திமுக அணியில் வைகோ, வழக்கறிஞர் வில்சன், தொழிற்சங்கத்தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் தேர்வாகினர்.
வைகோ சிறந்த நாடாளுமன்றவாதி. அவரது வாதங்கள் எதிரணியினரையும் ஏற்கத்தகுந்த வகையில் அமையும். தற்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசை வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார். இது ஆளும் தரப்பினரை கடுமையாகப் பாதித்துள்ளது.
அதன் காரணமாக வைகோவை விமர்சித்து கடிதம் எழுதுகின்றனர். ட்வீட் போடுகின்றனர். சமீபத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. வைகோ குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம் வருமாறு:
“சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் வைகோ. அந்தப் பொறுப்புக்கு அவர் தகுதியானவர் தானா? என்பதை நெறிமுறை கமிட்டி மூலம் ஆய்வு நடத்த வேண்டும்.
இந்தி மொழி பிரதான மொழி அல்ல என்றும் அது ரயில்வே நேர அட்டவணைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தப்படும் மொழியாக உள்ளது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். இது அனைத்து இந்தியர்களையும் அவமானப்படுத்தும் செயலாகக் கருதுகிறேன்.
அது மட்டுமல்லாமல் பிரதமரை மக்களவையில் ஆங்கிலத்தில் பேச வலியுறுத்தியுள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 351-ன் படி இந்தி மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் சமஸ்கிருதத்தை இறந்துபோன மொழி என்று விமர்சித்துள்ளார்.
சட்டப்பிரிவு 351-ன் படி இந்தி மொழியைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தை எழுதப் பயன்படுத்தலாம் என்பது அரசியல் சட்டத்திலேயே உள்ளது. இதை எதிர்ப்பதன் மூலம் வைகோ இந்திய தேசத்தை அவமானப்படுத்துகிறார்.
இது அவர் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்கும்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பேன் என எடுக்கப்படும் உறுதிமொழியை மீறுவதாக அமைந்துள்ளது. இது தேசப்பற்று மிக்க இந்தியர்களை அவமானப்படுத்தும் ஒரு செயலாக அமைந்துள்ளது.
ஆகவே, நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது நெறிமுறை அடிப்படையில் வைகோவின் இத்தகைய நடத்தைக்காக அவரை மாநிலங்களவை உறுப்பினராக நீடிக்க அனுமதிக்க மறுப்பது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்ற வழி உள்ளதா என்பதைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.