Published : 17 Jul 2019 01:23 PM
Last Updated : 17 Jul 2019 01:23 PM

மதுரை- நத்தம் 4 வழிச்சாலைக்காக 5 மாதங்களில் திருப்பாலை வரை மேம்பாலம்: நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் தகவல்

மதுரை - நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் செக்மென்டுகள் எனப்படும் இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணி | படம்: சிம்ரன்.

மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தின் மேல் பகுதியில் ‘செக்மென்ட்கள்’ எனப்படும் இணைப்புப் பாலங்கள் 2 தூண்களுக்கு இடையே வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதால், இந்தாண்டுக்குள் திருப்பாலை வரை மேம்பாலம் அமைக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் வி.சரவணன் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு விரைந்து செல்ல 2-வது சாலையாக மதுரை-நத்தம் சாலை 4 வழிச்சாலையாக ரூ.1,020 கோடியில் மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை பாண்டியன் ஓட்டல் - ஊமச்சிகுளம் இடையேயான 7.3 கிமீ தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிக்கு மட்டும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இப்பணி முடிவதற்குள் நத்தம்-துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  மதுரை பறக்கும் பாலப்பணி 2018 நவம்பரில் துவங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய இப்பணி விரைவாக நடந்து வருகிறது. 192 தூண்களில் 150 தூண்கள் வரை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 40-க்கும் அதிகமான தூண்கள் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டன. தூண்களின் மேல் அமையும் பாலம் ‘செக்மென்ட்’ வகை (segmental type) ரெடிமேட் இணைப்பு பாலங்கள் ஊமச்சிகுளம் அருகே 10 ஏக்கரில் பிரதானமாக தயாராகி வருகிறது. 
பாண்டியன் ஓட்டல் முதல் ஆயுதப்படை மாரியம்மன் கோயில்வரை தூண்களுக்கிடையே இணைப்பு பாலங்களை பொருத்தும் பணி ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கியது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் வி.சரவணன் கூறுகையில், ‘ மிகப்பெரிய ‘செக்மென்ட்’களை ஊமச்சிகுளத்திலிருந்து நீண்ட லாரிகளில் ஏற்றி, பாதுகாப்பாக பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வரை நள்ளிரவில் கொண்டு வருகிறோம். முதல் இரு தூண்களுக்கிடையே இணைப்பு பாலங்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இப்பணி நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவும், எவ்வித சிக்கலும் இல்லாமல் நடந்தது. இப்பணி தொழில்நுட்ப வசதியுடன் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்ற பணிகள் சரியாக நடந்திருந்தால் மட்டுமே இணைப்பு பாலங்களை  பொருத்த முடியும். தற்போது வெற்றிகரமாக பொருத்தப்பட்டுவிட்டதால் இனிமேல் பணிகள் அதிக வேகத்துடன் நடக்கும். இந்தாண்டு இறுதிக்குள் திருப்பாலைவரை மேம்பாலம் அமைக்கப்பட்டுவிடும் என நம்புகிறோம். மேலே இணைப்பு பாலங்கள் பொருத்தப்பட்டுவிட்டால், கீழே சாலையில் எவ்வித இடையூறும் இருக்காது.

விஷால் டி மால் அருகே இருந்து பாலத்தில் ஏறுவதற்கான தூண்கள் அமைக்கும் பணி துவங்கிவிட்டது. பாலத்திலிருந்து தல்லாகுளம் மற்றும் மாட்டுத்தாவணி நோக்கி இறங்கி செல்லும் வகையில் இரு வழிகள் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். நாராயணபுரம், திருப்பாலை மின்வாரிய அலுவலகம் அருகே பாலத்தில் ஏறி, இறங்கும் வசதி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதியிலுள்ள கண்மாய்களை சுற்றி பூங்கா, நடைபாதை என பல வசதிகள் உருவாக்கப்படுகிறது. இதற்கான வரைபட அனுமதி கிடைத்ததும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்’ என்றார்.

-எஸ்.ஸ்ரீனிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x