Published : 17 Jul 2019 12:59 PM
Last Updated : 17 Jul 2019 12:59 PM

ரூ.600 கோடி செலவில் மேலும் 2 ஆயிரம் புதிய பேருந்துகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

ரூ.600 கோடியில் புதிதாக மேலும் 2,000 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பு:

"போக்குவரத்துத் துறை
1. தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பேருந்துகளை பொதுமக்களின் சேவைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும், புதியதாக 2,000 பேருந்துகள், 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்.

2. இந்த நிதியாண்டில், அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும். 

பால்வளத் துறை
தமிழ்நாட்டில், 19 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களும், மாநில அளவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமும் இயங்கி வருகின்றன.

இன்றளவும், சில மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், இரண்டு முதல் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றியங்கள் மூலமாக உரிய நேரத்தில் சேவை வழங்கவும், நுகர்வோர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கு அருகிலேயே, தரமான ஆவின்பால் மற்றும் பால் உபபொருட்கள், தங்கு தடையின்றி உடனுக்குடன் கிடைக்கவும் ஏதுவாக,

1. திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.
2. தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தருமபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.
3. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.
4. திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.
5. விழுப்புரம்-கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளரர் ஒன்றியம் உருவாக்கப்படும்.

ஒன்றியங்களைப் பிரிப்பதன் விளைவாக, ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் பால், நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டரிலிருந்து, 35 லட்சம் லிட்டராகவும், ஆவின் பால் விற்பனை 22.5 லட்சம் லிட்டரிலிருந்து, 25 லட்சம் லிட்டராகவும் உயரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x