Published : 17 Jul 2019 11:56 AM
Last Updated : 17 Jul 2019 11:56 AM

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா?- மார்க்சிஸ்ட் கண்டனம்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர கால நிலை நிலவுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் போராட்டம் நடத்த, எதிர்ப்புகளைத் தெரிவிக்க, விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சி தவிர அநேகமாக மற்ற கட்சிகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காவல்துறையிடம் அனுமதி பெறவே போராட வேண்டியிருக்கிறது. 

நீதிமன்றத்தை அணுகித்தான் அனுமதி

உயர் அதிகாரிகளைச் சந்தித்தோ அல்லது நீதிமன்றத்தை அணுகியோதான் அனுமதி பெற வேண்டியதிருக்கிறது அல்லது மக்கள் நடமாட்டமே இல்லாத இடங்களுக்கு அமைப்புகளைத் தள்ளுவது, சில குறிப்பிட்ட விஷயங்களை பேசக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது, கூட்டப்பொருளை மாற்றி எழுதித் தர வற்புறுத்துவது போன்ற செயல்பாடுகள் காவல்துறை தரப்பில் அதிகரித்து வருகின்றன. தர்ணா போன்ற இயக்கங்களுக்கு சில தருணங்களில் அனுமதி கொடுத்துவிட்டு பந்தல், நாற்காலிகளைப் போடக்கூடாது என்று கட்டுப்படுத்தப்படுகிறது.

அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து சொல்லக்கூடாது என்று சட்டவிரோதமாக காவல்துறை தடுக்கிறது. 8 வழிச் சாலை, கோவையில் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனமான சூயசுக்கு கொடுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை மூடல் உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்துச் சொல்லவும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும் தடை போடப்பட்டு கைது செய்வது - வழக்குப் போடுவது - சிறையிலடைப்பது - தேசத்துரோகப் பிரிவை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது அறிவிக்கப்படாத அவசர கால நிலையாக தெரிகிறது.

கருத்துரிமைப் பறிப்பு

இந்நிலை ஜனநாயகத்திற்கும், சட்டவிதிகளுக்கும் முற்றிலும் புறம்பானது. எதிர்வரும் விமர்சனங்களுக்கு பதில் கூற இயலாத போதாமையையும், மக்கள் விரோதக் கொள்கைகளையும் மூடி மறைக்க மத்திய, மாநில அரசுகள் கருத்துரிமைப் பறிப்பை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

காலனியத் தொடர்ச்சி

விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்தியாவில் கொண்டு வரப்பட்டதுதான் தேசத்துரோக குற்றம். சுதந்திர இந்தியாவில் இ.பி.கோ. 124 ஏ பிரிவாக அது தொடர்வது காலனியத் தொடர்ச்சியாகும். இப்பிரிவு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது’’.

இவ்வாறு பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x