

ந.சரவணன்
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தினசரி 25 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்காததால் 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல முடிய வில்லை என குடிநீர் வாரிய அதி காரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீரை ரயில் மூலம் கொண்டு செல்ல தமிழக அரசு உத்தரவிட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 1 கோடி லிட்டர் குடிநீரை ரயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
ஒரு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரயில் கடந்த 12-ம் தேதி புறப்பட்டது. முதல் நாள் என்பதால் அன்று ஒரு ரயில் மட்டும் சென்னைக்கு சென்றது. அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் ரயில்கள் மூலம் தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு செல்லும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், கடந்த 5 நாட்களாக தினசரி ஒரே ஒரு ரயிலில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்லப் படுகிறது. மேலும், கூடுதலாக ரயில் இயக்கப்படாததால், சென்னைக்கு தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் ரயிலை இயக்கினால் மட்டுமே திட்டமிட்ட படி 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக அரசு உத்தரவுப்படி சென்னைக்கு ரயில் மூலம் குடிநீரை அனுப்புகிறோம். இதற்காக, ஜோலார்பேட்டையை அடுத்த பார்ச்சம்பேட்டை 5-வது யார்டில் 5 பொறியாளர்கள் தலைமையில் 45 தொழிலாளர்கள் குடிநீரை ரயில் வேகன்களில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து பார்ச்சம் பேட்டை யார்டு பகுதிக்கு ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு வந்தடைகி றது. இந்த ரயிலில் 4 மணி நேரத்துக் குள் குடிநீரை நிரப்புகிறோம். அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு ரயில் சென்னைக்கு புறப்படு கிறது. அங்கு இரவு 11 மணியள வில் சென்றடையும் ரயிலில் இருந்து தண்ணீரை இறக்க 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. அதன் பிறகு அந்த ரயில் வில்லி வாக்கத்திலேயே நிறுத்தி வைக் கப்பட்டு மறுநாள் காலை மீண்டும் ஜோலார்பேட்டைக்கு வருகிறது.
கூடுதல் ரயில் இருந்தால், முதல் ரயில் புறப்பட்ட சில மணி நேரத்தில் 2-வது ரயிலில் தண்ணீரை நிரப்பி சென்னைக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால், ரயில்வே நிர்வாகம் அதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை. எங்களை பொருத்தவரை ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் குடிநீரை சென்னைக்கு அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் எங்களிடம் தயாராக உள்ளன. இதற்கு, ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார்.
ரயில்வே அதிகாரி விளக்கம்
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜோலார்பேட்டை - சென்னை ரயில்வே வழித்தடத்தில் 24 மணி நேரமும் பயணிகள், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் வந்து செல்கின் றன. கால நேரம், ரயில் போக்கு வரத்து இல்லாத நேரத்தை கணக் கிட்டுதான் குடிநீர் ரயிலை இயக்க வேண்டியுள்ளது. குடிநீர் ஏற்றிச் செல்லும் ரயிலை விரைவாக இயக்க முடியாது. மிதமான வேகத்தில் இயக்கப்படுவதால் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு வர காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, இதற்கான நேரமைப்பு குறித்து ஆலோசித்து வருகிறோம். ஓரிரு நாளில் (வரும் 19-ம் தேதி அல்லது 20-ம் தேதி) 2-வது ரயில் ஜோலார்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த 2 ரயில்கள் மூலம் தினசரி காலை 7 மணி, பிற் பகல் 12 மணி, மாலை 4 மணி, இரவு 8 மணி என ஒரு நாளைக்கு 4 முறை ரயிலில் குடிநீர் எடுத்துச் செல்ல நேரம் ஒதுக்கப்படும்” என்ற னர்.
ரயில் வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீரை 2 முதல் 3 மணி நேரத்தில் வேகன்களில் ஏற்றிவிடு வோம் என்று குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. இதனால், ரயில் புறப்படும் நேரத்தை திட்டமிட முடிய வில்லை என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத் தில், தண்ணீரை நிரப்பும் பணியை விரைந்து முடிக்க தொழிலாளர்கள் பழக்கப்பட வேண்டும் என்பதால் சில நாட்கள் பிடிக்கும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.