

அத்திவரதர் தரிசனத்தில் இடைத் தரகர்களை கட்டுப்படுத்த வேண் டும் என்று இந்து சமய அற நிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் எழுந்தருளி இருக்கும் அத்திவரதர், 16-வது நாளான நேற்று வசந்த மண்டபத்தில் இளஞ்சிவப்பு நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வார இறுதி நாட்களில் இருந்தது போல் பெரிய அளவில் நெரிசல் கடந்த 2 தினங்களாக ஏற்பட வில்லை. நேற்று முன்தினத்தை விட கூடுதல் பக்தர்கள் நேற்று வந்தனர். பக்தர்கள் வருகை சீராக இருந்ததால் சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் அத்திவரதரை வழிபட முடிந்தது.
முக்கிய பிரமுகர்கள் வரிசையில் அனுமதிச் சீட்டு இல்லாமல் யாரை| யும் அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா பலமுறை அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும் போலீஸார், அரசியல் வாதிகள், அறநிலையத் துறை ஊழியர்கள், கோயில் பணியாளர் கள் பலரும் தங்களுக்கு தெரிந்த வர்களை உள்ளே அனுப்பி வரு வதாக கூறப்படுகிறது.
வெளியூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்களிடம் ஆயிரக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களை உள்ளே முறைகேடாக அனுப்பும் செயல் களில் சில இடைத்தரகர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் முக்கிய பிரமுகர்கள் செல் லும் பாதையில் நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி நேற்று கோயிலுக்கு வந்து திடீர் ஆய்வு செய்தார். அப் போது முக்கிய பிரமுகர்கள் வாயிலில் அதிக கூட்ட நெரிசல் இருப்பது குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்தார். பின்னர் இடைத்தரகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகிகளுக்கு உத்தர விட்டார்.